மணிலா: பிலிப்பைன்சில் புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலியாகினர். வடக்கிழக்கு பிலிப்பைன்சின் இசபெல்லா, இபுகாவோ மாகாணங்களை நேற்று அதிகாலை டிராமி எனப் பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 160 கிமீ வேகத்தில் வீசிய சூறைகாற்றால் வீட்டின் மேற்கூரைகள் பறந்தன. பல இடங்களில் மின்கோபுரங்கள், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிராமி புயல் காரணமாக பல மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கார்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.
மேலும் வௌ்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்து விட்டனர். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வௌ்ளத்தில் சிக்கியுள்ளவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. டிராமி புயல் தென்சீன கடலில் இன்று நுழையும், அதுவரை பாதிப்புகள் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post பிலிப்பைன்சை தாக்கிய டிராமி புயல்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி appeared first on Dinakaran.