×
Saravana Stores

500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: அப்போலோ மருத்துவமனை 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அப்போது அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, இதய அறுவை சிகிச்சை நிபுணர் எம்.எம்.யூசுப் உள்ளிட்டோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: ரோபோடிக் உதவியுடன் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை, ஸ்டெர்னோடோமி அல்லது மார்பில் பெரிய அளவில் துளையிட்டு சிகிச்சை செய்யாமல் துல்லியமான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் இதய பராமரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிநவீன தொழில்நுட்பம், சிறிய கீறல்கள் மூலம் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்ய முடியும். இதில் சிறிய ரோபோ கைகள், 3டி கேமரா ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இதனால் திறந்த இதய அறுவை சிகிச்சையை விட பல வகையான மேம்பட்ட நன்மைகளை வழங்குகிறது. குறுகிய காலத்தில் குணம் அடைந்து நலம் பெறுதல், தொற்றுநோய்க்கான ஆபத்து இல்லாமை ஆகிய முக்கிய பலன்கள அளிக்கிறது. பல நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே நடக்க தொடங்குகின்றனர். 3 முதல் 4 நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியும்.

திறந்த இதய அறுவை சிகிச்சையில், முழு அளவில் குணம் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப 3 முதல் 6 மாதங்கள் தேவைப்படும். அத்துடன் இந்த நவீன சிகிச்சை முறையில் 2 முதல் 3 வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். 500 ரோபோடிக் இதய சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் ஒரு மைல்கல்லை எட்டுவது என்பது நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் திறன்களுக்கும், எங்களிடம் வரும் நோயாளிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் ஒரு சான்றாகும். ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம் 30 முதல் 60 வயதுடைய நோயாளிகளுக்கு அதிக அளவில் பயன் அளிக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Apollo Hospitals ,Chennai ,Apollo Hospital ,Nungambakkam ,Apollo Hospitals Group ,Dr. ,Prathap Reddy ,Robotic ,
× RELATED அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி