×
Saravana Stores

ஜெயங்கொண்டம் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரியலூர், பெரம்பலூரில் இன்று களஆய்வு

அரியலூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜெயங்கொண்டம் சென்றார். இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் களஆய்வு செய்யும் அவர், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ₹1000 கோடியில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 21,862 பயனாளிகளுக்கு ₹174 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக கோவையில் கடந்த 5, 6ம் தேதிகளிலும், அடுத்ததாக 9, 10ம் தேதிகளில் விருதுநகரிலும் கள ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15ம்தேதி) களஆய்வு நடத்த உள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு 7.35 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் முதல்வரை, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், கட்சியினர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து காரில் அரியலூர் செல்லும் வழியில் மாவட்ட எல்லையான ‘கல்லகம் கேட்’ பகுதியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜெயங்கொண்டம் சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்கினார்.

இன்று (15ம்தேதி) காலை 8.15 மணியளவில் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே நகர திமுக சார்பில் கலைஞரின் சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் ₹1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிப்காட் (காலணி தொழிற்சாலை) தொழில் பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இதனைத்தொடர்ந்து திருமானூர் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2ம் கட்டமாக மாநில அளவிலான ஊட்டச்சத்து உறுதிப்படுத்துதல் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

இதையடுத்து, அரியலூர் கொல்லாபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர், ₹120 கோடி மதிப்பிலான 53 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ₹88 கோடியில் 507 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 11,721 பயனாளிகள் என மொத்தம் 21,862 பேருக்கு ₹174 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசின் நலத்திட்ட பணிகளின் செயல்பாடு குறித்து கள ஆய்வு செய்கிறார்.

பின்னர் அரியலூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பெரம்பலூருக்கு காரில் செல்லும் முதல்வர், பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் அங்கு ஓய்வெடுக்கிறார். மாலை பெரம்பலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், 2026 தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பெரம்பலூரில் இருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.

The post ஜெயங்கொண்டம் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரியலூர், பெரம்பலூரில் இன்று களஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Jeyangondam ,Ariyalur, Perambalur ,Ariyalur ,M. K. Stalin ,Jayangondam ,Perambalur ,Dinakaran ,
× RELATED மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்