பெங்களூரு: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், சர்பராஸ் கான் – ரிஷப் பன்ட் ஜோடியின் உறுதியான ஆட்டத்தால் நியூசிலாந்து அணிக்கு 107 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்… கடைசி நாளான இன்று இந்தியா மாயாஜாலம் நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது. 2வது நாளில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா வெறும் 46 ரன்னுக்கு சுருண்டது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரச்சின் ரவிந்த்ரா 134 ரன், கான்வே 91, சவுத்தீ 65 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 3, சிராஜ் 2, அஷ்வின், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 356 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்திருந்தது (49 ஓவர்). ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோகித் 52, கோஹ்லி 70 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
சர்பராஸ் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார். சர்பராஸ் – ரிஷப் பன்ட் இணைந்து நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து ஸ்கோரை உயர்த்தினர். இவர்களைப் பிரிக்க நியூசி. பவுலர்கள் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. சர்பராஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மறு முனையில் பன்ட் அரை சதம் அடித்தார். உறுதியுடன் போராடிய இருவரும் இந்தியாவுக்கு முன்னிலை கொடுத்து நம்பிக்கை அளித்தனர்.
இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 177 ரன் சேர்த்து அசத்தியது. சர்பராஸ் 150 ரன் (195 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் அஜாஸ் படேல் வசம் பிடிபட்டார். சதத்தை நெருங்கிய பன்ட், துரதிர்ஷ்டவசமாக 99 ரன்னில் (105 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) ஓ’ரூர்கே பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதனால் உற்சாகம் அடைந்த நியூசிலாந்து தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்த… ராகுல் 12, ஜடேஜா 5 ரன் எடுத்து வில்லியம் ஓ’ரூர்கே வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
மேட் ஹென்றி பந்துவீச்சில் அஷ்வின் (15 ரன்), பும்ரா (0), சிராஜ் (0) அணிவகுக்க… இந்தியா 2வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (99.3 ஓவர்). குல்தீப் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 54 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து பந்துவீச்சில் ஓ’ரூர்கே, ஹென்றி தலா 3 விக்கெட், அஜாஸ் 2, பிலிப்ஸ், சவுத்தீ தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கிய நிலையில், மழை காரணமாக 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் ரோகித் மற்றும் கோ மாயாஜாலம் ஏதாவது நிகழ்த்துமா? நியூசிலாந்தை குறைந்த ரன்னில் சுருட்டி சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post இந்தியா 462 ரன் குவித்து ஆல் அவுட்: நியூசிலாந்துக்கு 107 ரன் இலக்கு, இன்று கடைசி நாள் பரபரப்பு appeared first on Dinakaran.