×

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் முற்றிலும் சேதமான தார்சாலை: மாணவர்கள் அவதி

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பாலாபுரத்தில் இருந்து தாமனேரி செல்லும் சுமார் 2 கிமீ தூரமுள்ள தார்சாலை முறையான பராமரிப்பின்றி சரளை கற்களாக சிதறிய நிலையில் பலத்த சேதமடைந்து உள்ளது. இச்சாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிளில் சென்று வருவதில் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடங்கிய பாலாபுரத்தில் இருந்து தாமனேரி கிராமத்துக்கு செல்லும் சுமார் 2 கிமீ தூரத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் இச்சாலை மழை மற்றும் வெயில் காலங்களில் முறையான பராமரிப்பின்றி, ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு, தார்சாலைகள் பெயர்ந்து, நாளடைவில் குண்டும் குழியுமாக பலத்த சேதமடைந்தது. தற்போது இச்சாலை முற்றிலும் உருக்குலைந்து, சரளை கற்கள் சிதறி கிடக்கின்றன.

இச்சாலை வழியே தாமனேரி மற்றும் பாலாபுரத்துக்கு அரசு வழங்கிய சைக்கிளில் சென்று வரும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சரளை கற்களில் தடுமாறி, சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், அவ்வழியே நடந்து செல்லும் பலருக்கு கால்களில் சரளை கற்கள் குத்துவதால் நடப்பதற்குகூட தடுமாறி வருகின்றனர். இதனால் அவ்வழியே அவசரகால உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள்கூட வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பாலாபுரத்தில் இருந்து வீரமங்கலம், பந்திக்குப்பம், தாமனேரி வரை செல்லும் சுமார் 2 கிமீ தூரமுள்ள சாலையை உடனடியாக சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் முற்றிலும் சேதமான தார்சாலை: மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Dharsala ,RK Pettah Union ,RK Pettah ,RK ,Pettah ,union ,Palapuram ,Damaneri ,Dinakaran ,
× RELATED ஆர்.கே பேட்டை ஒன்றியத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆலோசனை