×
Saravana Stores

பிரண்டையின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

உணவே மருந்து என்ற அடிப்படையில் நமது முன்னோர்கள் பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவந்துள்ளனர். அந்த
வகையில், பிரண்டையும் ஒன்று. பிரண்டையை மருத்துவ குணங்களின் அடிப்படையில் நமது முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக கிராமத்தில் ஒரு சொலவாடை ஒன்று உண்டு. அது பெத்த வயிற்றுக்கு பிரண்டை என்பதாகும். இதற்கு அடிப்படைக்காரணம் கிராமப்புறங்களில் த ங்கள் பிள்ளைகள் சொல் மீறி நடப்பதினால் ஏற்படும் கோபத்தினால் பெற்றோர்களுக்கு உடல் வெப்பம் அதிகரித்து வயிற்றுப்புண் ஏற்படுத்தும். இதனை தடுக்கும் தன்மை பிரண்டைக்கு இருப்பதினால் பெத்த வயிற்றுக்கு பிரண்டை என்று கூறுவது வழக்கம்.

பிரண்டை, மனித நடமாட்டம் இல்லாத பகுதிகள், வேலிகள் போன்ற இடங்களில் வளர்க்கக்கூடிய கொடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இதற்கு வஜ்ஜிரவல்லி என்று வேறு பெயரும் உண்டு. பிரண்டையில் பல வகைகள் உள்ளன. அவை சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை, புளிப்பிரண்டை மற்றும் ஓலைப் பிரண்டை ஆகும். இருப்பினும் சாதாரணப் பிரண்டையே அனைவராலும் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பிரண்டையின் தாவரவியல் பெயர்:

சிஸ்ஸிஸ் டூவாட்ராங்குலாரிஸ் இது விட்டேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இது இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. இதன் இலை, வேர் மற்றும் தண்டு மருத்துவக் குணங்கள் கொண்டதாக திகழ்கிறது.

பிரண்டையில் பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக விட்டமின் ஏ மற்றும் ஈ, நார்ச்சத்து, மெக்னீசியம், கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் காணப்படும் தாவர மூலக்கூறுகளான குயிர்சிடின், பீட்டா கரோட்டீன்ஸ டையோஸ்மின், பீட்டா சைட்டோஸ்டிரால், ஹெஸ்பிரிடின், கீட்டோஸ்டிரால், காம்பெரால், ஆல்பா அமைரின் மற்றும் அமைரோன், குவாட்ரன்குலோரின் பிரண்டையின் பல்வேறு மருத்துவப் பண்புகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.

பிரண்டையின் மருத்துவப் பண்புகள்:

மன அழுத்தம் மற்றும் வாயுப் பிரச்னைகளால் ஏற்படும் செரிமான பிரச்னையை சரிசெய்ய பிரண்டை பெரிதும் உதவுகிறது. கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பிரண்டையில் நிறைந்து காணப்படுவதினால் மூட்டு வலி, எலும்பு பிரச்னை போன்றவற்றிற்கு நல்ல ஒரு தீர்வாக பிரண்டை உள்ளது.குறிப்பாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதினால் ரத்த ஒட்டத்தின் வேகம் குறையக்கூடும். இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு இதய வால்வுகள் பாதிப்படையும். இந்தப் பாதிப்பினை குறைத்து இதயத்தின் செயல்பாட்டினை பிரண்டை மேம்படுத்துகிறது.

ஆண்டி ஆக்ஸிடென்டுகள் அதிகமாக பிரண்டை கொண்டுள்ளதினால் உடல் செல்களின் செயல்பாட்டினை ஊக்குவித்து ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது.
மூளை நரம்புகளை பலப்படுத்தி மூளை செயல்பாட்டினை ஊக்குவிக்குகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முதுகுவலி, இடுப்பு வலி போன்ற பிரச்னையை சரிசெய்கிறது.

வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதினால் சருமம் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்யக்கூடியது. பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.

இத்தகைய நன்மைகளை அளிக்கக்கூடிய பிரண்டையின் தண்டு மற்றும் இலைகளை கொண்டு துவையல் செய்து உணவில் சேர்த்து வந்தால் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும். மேலும் பிரண்டையின் மருத்துவ குணங்களைப் பற்றி அகத்தியர் பாடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரண்டை துவையல் செய்முறை

பிரண்டைத் தண்டுகளில் காணப்படும் தோல் மற்றும் நார்களை கவனமாக அகற்றி சிறிய துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெயில் வதக்கி, அதனுடன் காய்ந்த மிளகாய், புளி மற்றும் தேங்காய், உளுந்து மற்றும் உப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவில் சேர்த்துக் கொள்ள மூட்டு பிரச்னைகள் சரியாகும்.

பிரண்டையை நெய்யால் வறுத்துப் பின்பரைத்து மாதே
வெருண்டிடா தேற்று விழுங்கி- லரண்டுவரு
மூலத்தினவடங்கு மூலவரத்த மறும்
ஞானத் தினுள்ளே நவில்
மந்தம் வயிற்று வலி வாயுகதி காரமுளை
சேர்ந்த மூலங்கபட முட்செம்புனற் போக் – கோய்ந்தநடை
யெல்லா மகலு மெழுப்பு மதிகபசி
மல்லார் பிரண்டையுண்டு வா.

The post பிரண்டையின் பயன்கள்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kungum ,Department ,R. Sharmila ,
× RELATED நோய் நாடி நோய் முதல் நாடி