×

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றார்: சர்வதேச ஒத்துழைப்பை நாடுவதாக உரை


கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றுக் கொண்டார். அப்போது, நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் என அவர் வாக்குறுதி அளித்தார். இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது. இதில், அதிபர் ரணில் விக்ரமசிங்கே உட்பட 38 பேர் போட்டியிட்டனர். முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் யாரும் 50 சதவீத பெரும்பான்மை பலத்தை எட்டவில்லை. இதனால் வரலாற்றில் முதல் முறையாக 2ம் கட்ட விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், என்பிபி கட்சியின் மார்க்சிஸ்ட் தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர், 1.05 லட்சம் விருப்ப வாக்குகளுடன் மொத்தம் 57.4 லட்சம் வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசா 1.67 லட்சம் விருப்ப வாக்குகளுடன் 45.7 லட்சம் வாக்குகளுடன் 2ம் இடம் பெற்றார். ரணில் விக்ரமசிங்கே 3ம் இடத்துடன் தோல்வியை தழுவினார்.

இதைத் தொடர்ந்து, இலங்கையின் 9வது அதிபராக 56 வயதாகும் திசநாயக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அதிபர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சத்தியபிரமாணம் ஏற்றுக் கொண்ட திசநாயக, அதிபராக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘‘மக்களின் ஆணையை மதித்து அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்த ரணில் விக்ரமசிங்ேகவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியல்வாதிகளின் நடத்தை குறித்து மக்களுக்கு அவநம்பிக்கை இருப்பதால் அவர்களின் கவுரவத்தை மீட்டெடுக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்’’ என்றார். பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது தொடர்பாக பேசிய அதிபர் திசநாயக, ‘‘இலங்கை தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது.

நமக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை. நான் ஒன்றும் மந்திரவாதி அல்ல. இந்த நாட்டின் சாதாரண குடிமகன். என்னிடம் திறமைகளும், குறைபாடுகளும் உள்ளன. மக்களின் திறமை, அறிவாற்றலை பயன்படுத்தி இந்த நாட்டை வழிநடத்த சிறந்த முடிவுகளை எடுப்பதே எனது முதல் பணி. நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எனது பொறுப்பை நிறைவேற்றுவேன். அதற்கான கூட்டுப் பொறுப்பில் ஒரு பகுதியாக நான் இருப்பேன்’’ என்றார். அதிபராக பதவியேற்ற பிறகு விழாவில் பங்கேற்ற புத்த மத துறவிகளிடம் திசநாயக ஆசி பெற்றுக் கொண்டார். புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அரசுக்கு வழிவிடும் வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தனே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமர் மோடிக்கு நன்றி
இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட திசநாயகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு எக்ஸ் தளத்தில் நேற்று பதிலளித்த திசநாயக, ‘‘பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகள், ஆதரவுக்கு நன்றி. இந்தியா, இலங்கை இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை ஏற்றுக் கொள்கிறேன். நாம் ஒன்றாக இரு நாட்டு மக்கள் மற்றும் பிராந்தியத்தின் நலனுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்’’ என கூறி உள்ளார்.

காங்கிரஸ் வாழ்த்து
இலங்கை அதிபர் திசநாயகவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசநாயகவுக்கு காங்கிரஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் இலங்கையும் பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. நமது பிராந்தியத்தின் நலனுக்காக நமது உறவுகள் மற்றும் மதிப்புகளை வலுப்படுத்த வேண்டுமென இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நமது இரு நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்’ என கூறி உள்ளார்.

The post இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றார்: சர்வதேச ஒத்துழைப்பை நாடுவதாக உரை appeared first on Dinakaran.

Tags : Anura Kumara Disanayake ,Sri ,Lanka ,Colombo ,Anura Kumara Dissanayake ,President ,Sri Lanka ,Ranil ,Dinakaran ,
× RELATED லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள்...