×

போர்க்களத்தில் அல்ல மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது: ஐநாவில் பிரதமர் மோடி உரை

ஐநா: மனித குலத்தின் வெற்றி என்பது நமது கூட்டு பலத்தில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடக்கும் குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க 3 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளில் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் வந்த அவர் இந்திய வம்சாவளிகளை சந்தித்து பேசினார்.

பயணத்தின் கடைசி நாளான நேற்று நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் அவையின் 79வது பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “உலகின் எதிர்காலம் குறித்து சர்வதேச நாடுகள் விவாதிக்கும்போது மனிதனை மையமாக கொண்ட அணுகுமுறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் இல்லை. நமது கூட்டு பலத்தில் உள்ளது. நிலையாள வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில், மனித நலன், உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதன் மூலம் நிலையாள வளர்ச்சி வெற்றிகரமாக இருக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. இந்தியா தன் வெற்றியின் அனுபவத்தை உலகளாவிய தெற்கிலும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்வது அவசியம்” என்று இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக நேபாளம், பாலஸ்தீனம், குவைத் நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனான சந்திப்பில் காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர் மோடி, காசாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். பின்னர் பிரதமர் மோடி குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல் சபாவை சந்தித்து பேசினார்.

* இந்திய வளர்ச்சியில் இணைய வாருங்கள்
நியூயார்க்கில் அமெரிக்காவின் 15 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா தனது 3வது ஆட்சிக் காலத்தில் 2029க்குள் 3வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைய இருப்பதாக பிரதமர் மோடி பேசினார். அதோடு இந்தியாவில் வளர்ச்சியின் இணைய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

The post போர்க்களத்தில் அல்ல மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது: ஐநாவில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,UN ,Modi ,Quad Summit ,UN General Assembly ,United States ,Dinakaran ,
× RELATED இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார...