×
Saravana Stores

சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை: எஸ்.சி.,எஸ்.டி ஆணையம் உத்தரவு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையகரத்திற்கு மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து சர்ச்சைக்குரிய பாடல் பாடியிருந்தார். அந்த பாடலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் இடம்பெற்றது சர்ச்சையானது. இதையடுத்து, திருச்சி சைபர் க்ரைம் போலீசார் துரைமுருகனை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த கைது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் கைதுக்கு காரணமான குறிப்பிட்ட அந்த சொல்லை, சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். மேலும், அது ஏற்கனவே இருந்த பாடல் என்றும் அந்த பாடலை தான் எழுதவில்லை எனவும் சீமான் விளக்கம் அளித்து இருந்தார். இதற்கிடையே, சீமானுக்கு எதிராக பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஸ் என்பவர் கடந்த ஜூலை 16ம் தேதி, காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

அவர் புகார் மனுவில், சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்துப் பாடிய பாடலில் தீண்டாமையை வலியுறுத்தும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. மேலும், எனது தலைவரான கலைஞர் கருணாநிதியை இழிவுபடுத்தியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு சீமான், இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், குறிப்பிட்ட அந்த வார்த்தை இழிவுபடுத்தும் சொல் என்றும் தனது படத்தில் பயன்படுத்தியது தவறு எனவும் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே நன்கு தெரிந்தே கலைஞரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு மீண்டும் பாடலாக பாடியும் பேசியும் இருக்கிறார் சீமான். இது எனது மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே சீமான் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்டு காவல்துறை சிஎஸ்ஆர் அளித்துள்ளது, ஆனால் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இது தொடர்பாக மாநில பட்டியலின ஆணையத்திற்கு அஜேஸ் புகார் அனுப்பினார். இந்த புகாரை பரிசீலித்த பட்டியலின ஆணையம், பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. மனுதாரர் அளித்த புகாருக்கு பட்டாபிராம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது பற்றி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தான் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ஆவடி காவல் ஆனையகரத்திற்கு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை: எஸ்.சி.,எஸ்.டி ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Seeman: SC, ST Commission ,CHENNAI ,State SC, ST Commission ,Avadi Police Commissionerate ,Seeman ,Nam Tamilar Party ,Sattai Duraimurugan Wickrevandi ,Naam Tamilar Party ,Dinakaran ,
× RELATED பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க...