×
Saravana Stores

நரைன் – சால்ட் அதிரடி ஆட்டம்: நைட் ரைடர்ஸ் 261 ரன் குவிப்பு

 


கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், தொடக்க வீரர்கள் ஃபில் சால்ட் – சுனில் நரைன் ஜோடியின் அதிரடியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன் குவித்தது. ஈடன் கார்டனில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஃபில் சால்ட், சுனில் நரைன் இணைந்து நைட் ரைடர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். சூப்பர் பார்மில் இருக்கும் இருவரும் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, கொல்கத்தா ஸ்கோர் எகிறியது. நரைன் 23 பந்தில் அரை சதம் விளாச, சால்ட் 25 பந்தில் அரை சதம் அடித்தார்.

பஞ்சாப் கிங்ஸ் ஃபீல்டர்கள் பல கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டதும் கொல்கத்தா ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சுனில் – சால்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 138 ரன் சேர்த்து அசத்தியது. நரைன் 71 ரன் (32 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ராகுல் சஹார் பந்துவீச்சில் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். சால்ட் 37 பந்தில் தலா அரை டஜன் பவுண்டரி, சிக்சருடன் 75 ரன் விளாசி சாம் கரன் வேகத்தில் கிளீன் போல்டானார். அதன் பிறகும் கொல்கத்தா அதிரடி எந்த தொய்வும் இல்லாமல் தொடர்ந்தது. ரஸ்ஸல் 12 பந்தில் 24 ரன் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஷ்ரேயாஸ் 28 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

ரிங்கு சிங் 5 ரன்னில் வெளியேறினார். வெங்கடேஷ் அய்யர் 39 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன் குவித்தது. ரமன்தீப் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 2, சாம் கரன், ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 262 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.

The post நரைன் – சால்ட் அதிரடி ஆட்டம்: நைட் ரைடர்ஸ் 261 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Narine ,Salt ,Knight Riders ,Kolkata ,Kolkata Knight Riders ,Phil Salt ,Sunil Narine ,IPL league ,Punjab Kings ,Eden… ,Dinakaran ,
× RELATED மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தம்