சென்னை: இன்று மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஏற்கனவே 5 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்ற சிறப்பு மிக்க சட்டத்தை கடந்த 1970ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் சட்டப்பேரவையில் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றினார்.
அர்ச்சகர்களாக ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த நிலையில் தற்போதும் பெண்களும் அர்ச்சகர்களாக உருவெடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகராக, சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவார் பணிக்கு சுஹாஞ்சனா என்ற பெண் கடந்த 2021ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, திருவரங்கத்தில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்ற கிருஷ்ணவேணி, ரஞ்சிதா, ரம்யா ஆகியோர் ஒரு வருடம் பயிற்சி முடிந்து அர்ச்ககர் சான்றிதழை பெற்றுள்ளனர். அர்ச்சகர் பயிற்சி முடித்த பெண்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் திருக்கோவில்களில் பணியிடம் வழங்கப்படவுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் அடுத்தடுத்து பெண்களும் ஓதுவாராக நியமிக்கப்பட இருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இன்று மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மொத்தம் 180 ஓதுவார் பணியிடங்கள் உள்ளது; தற்போது 107 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும். இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
The post கருவறைக்குள் தீண்டாமையை உடைத்தெறிந்த தமிழ்நாடு!: மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.