திருப்பூர் : சரிவுகளில் இருந்து மீண்டு வளர்ச்சியடைந்து வரும் திருப்பூர் பின்னலாடத்துறை. ஒரு மாத காலத்திற்குள் ஒன்றிய மற்றும் மாநில அரசின் ஜவுளித்துறை பிரதிநிதிகள் திருப்பூர் தொழில்துறையினரை சந்தித்து கோரிக்கைகளை பெற்று சென்றுள்ளனர். சர்வதேச அளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி வகைகள் அதிக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வருவாய் ஈட்டி தரக்கூடியதும், வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடியதுமாய் ஜவுளித்துறை உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளில் திருப்பூர் பின்னலாடைத்துறை 54 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அளித்து வருகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, பருத்தி தட்டுப்பாடு, நிலையில்லாத நூல் விலை, சர்வதேச அளவில் போர் பிரச்சினை, செங்கடல் பிரச்சினை, கண்டெய்னர் தட்டுப்பாடு, போட்டி நாடுகளுக்கான வரி சலுகை காரணமான இந்தியாவில் துணி இறக்குமதி செய்யப்பட்டது.
மேலும், சரவதேச அளவில் ஜவுளித்துறை பாதிப்படைந்தது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் போர் பதற்றம் தணிந்து மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்ததன் காரணமாக ஜவுளித்துறை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு தயாரானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட அமைதியில்லா சூழல் காரணமாக அங்கு ஆர்டர் கொடுத்த வர்த்தகர்கள் இந்தியாவின் ஜவுளித்துறையின் மீது கவனம் செலுத்தினர்.
இந்நிலையில், சர்வதேச அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் கவனம் இந்தியாவின் பக்கம் இருப்பதால் இந்தியாவின் ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த ஒன்றிய அரசும், தமிழகத்தின் ஜவுளித்துறை வளர்ச்சியின் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க மாநில அரசும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
அதன் காரணமாக ஒரே மாதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பிரதிநிதிகள் திருப்பூர் தொழில் துறையினரை சந்தித்து தொழில்துறையினரின் கோரிக்கைகளை கேட்டு சென்றுள்ளனர். கடந்த 5ம் தேதி திருப்பூருக்கு வந்த ஒன்றிய அரசு ஜவுளித்துறை செயலாளர் ரக்சனா ஷா, தொழில் துறையினரை சந்தித்து கலந்துரையாடினார். தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்க்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.
சர்வதேச ஜவுளி சந்தையின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில் திருப்பூர் தொழில் துறையினர் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சென்றார். அதன் தொடர்ச்சியாக கடந்த 24ம் தேதி திருப்பூர் ஏற்றுமதியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசின் கைத்தறி கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளர் அமுதவல்லி, மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் லலிதா அகியோர் தொழில் துறையினரின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.
மேலும், தமிழ்நாடு அரசு 2030ம் ஆண்டு ஒரு டிரில்லியன் வர்த்தகம் என்ற இலக்கை வைத்திருப்பதாகவும், இதற்கு திருப்பூர் பின்னலாடைத்துறையினரின் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்தனர். ஒரு மாத காலத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் ஜவுளித்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்ட திருப்பூரின் ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடலில், ஜவுளி சந்தையில் போட்டி நாடுகளை சமாளிக்க வரிச்சலுகை, பருத்தி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு, இறக்குமதி இயந்திரங்களுக்கான நிலுவை மானியம், மின் கட்டண சலுகை, நிரந்தர ஜவுளி சந்தை, ஆய்வகம், தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் கூறுகையில், ‘‘ஒன்றிய, மாநில அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கேட்டு செல்வது மகிழ்ச்சிகரமானதாக உள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றினால் திருப்பூரின் தொழில்துறை மட்டுமல்லாது மாநில மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் உயரும். இதனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் பின்னலாடைத்துறையினருக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும். ஜவுளித்துறையின் கீழ் உள்ள பின்னலாடைத்துறைக்கென தனி வாரியம் அமைக்கப்படவேண்டும். வாரிய அலுவலகத்தை திருப்பூரில் அமைக்க முன் வரவேண்டும்’’ என்றார்.
சிறுதொழில் முனைவோர் விருப்பம்
திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு இணையாக உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. எனவே, அரசு பிரதிநிதிகள் தங்களிடமும் ஆலோசனை மேற்கொண்டு தங்கள் துறை சார்ந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
The post வளர்ச்சியடையும் பின்னலாடை துறை தொழில்துறையினர் கோரிக்கை நிறைவேறுமா? appeared first on Dinakaran.