வி.கே.புரம்: முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த 22ம் தேதி முதல் நேற்று முன்தினம் (27ம் தேதி) வரை நடந்தது. 60 கல்லூரி மாணவர்கள், 80 வேட்டை தடுப்பு காவலர்கள், 40 தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் சொந்த வாகனங்களில் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.