கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த பருவமழை குறைந்ததை தொடர்ந்து கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காணரமாகவே கோவை குற்றால அருவியில் அதிகளவிலான தண்ணீர் வரத்து இருந்தது. குற்றாலம் செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், பொதுமக்கள் அருவியில் குளிக்கும் பகுதியில் பெரிய அளவிலான குழி ஏற்பட்டது.
தொடர் மழையால் அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் கடந்த மாதம் 19ம் தேதி முதல் குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் குறைந்துள்ளது. அருவியில் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால், வனத்துறையினர் அருவியில் ஏற்பட்ட குழியை மூடுதல் உள்பட பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து 40 நாட்களாக்கு பின் கோவை குற்றாலம் இன்று திறக்கப்படுகிறது.