×
Saravana Stores

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் 1000வது குடமுழுக்கு காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்தது: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

சென்னை: திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போது 1000வது கோயிலாக காசி விஸ்வநாதர் கோயிலில் குடமுழுக்கு நடந்துள்ளது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 1,000வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆன்மிகவாதிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோயிலில் அதிகாலை நாலாவது கால யாகசாலை வழிபாடும், அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பட்டு, அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: முதல்வர் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோயில்களை புனரமைத்து திருப்பணி செய்ய 2022-23ம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023 – 24ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார். அதன்படி 2022-23ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோயில்களும், 2023-24ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோயில்களும் அரசு மானியம், கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த கோயில்களின் வைப்பு நிதி ரூ. ஒரு லட்சத்தை 2 லட்சமாக உயர்த்தி அதற்கான நிதியுதவி ரூ.129.50 கோடியை ஒரே தவணையில் வழங்கியவர் முதல்வர். மேலும், ஒரு கால பூஜை திட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் 2,000 கோயில்களை இணைத்திட ரூ.40 கோடி வழங்கியதோடு, 2023-24ம் நிதியாண்டில் 2,000 கோயில்களை இணைக்க அரசு நிதியாக ரூ.30 கோடியும், இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியாக ரூ.10 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,000 கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. ஒரு கால பூஜை திட்டத்தில் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 1,030 கோயில்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நிறைவடைந்துள்ளது.

வெகு விரைவில் 1,030 கோயில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை இந்து சமய அறநிலையத்துறை விரைவில் வெளியிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கவுமார மடம், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சிவநெறிச் செம்மல் பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் 1000வது குடமுழுக்கு காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்தது: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : 1000th ,Khasi Viswanathar Temple ,Tsagam Government ,Minister ,Segarbabu ,Chennai ,Khasi Viswanadar ,Temple ,Dizhaga-led Government ,Djagam Government ,Khasi Viswanadar Temple ,Sekarbhabu ,
× RELATED 1000வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு...