×
Saravana Stores

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம்: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் சாலை பணிகள் குறித்து ஆலோசனை

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும கட்டிடத்தின் 5வது மாடியின் மேற்குப் பகுதியில் HUDCO நிறுவனத்திடம் மாத வாடகைக்கு பெற்று நவீன வசதிகளுடன் புணரமைக்கப்பட்ட இவ்வலுவலக பகுதியினை திறந்து வைத்தார்கள்.

இவ்வலுவலக பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முழுமைத் திட்டப் பிரிவு அமைவதுடன் 100 அலுவலர்கள் பணிபுரியும் வகையில் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் நவீன அலுவலகமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனைத்து அலுவலக பகுதிகளையும் புணரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும ஆய்வு கூட்டரங்கில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் மற்றும் அப்பணிகளுடன் சேர்ந்து நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை அமைக்கும் பணிகளாக 1. அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும் 2. சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் வரையிலும் 3. ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகளையும், முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பேருந்து நிறுத்திமிடத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும், மழைநீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைய உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆலோசனை செய்தார்.

மேலும், குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகள் குறித்தும் மற்றும் பேருந்து முனையத்தின் இதர பணிகளான மழைநீர் வடிகால் அமைப்பு, பேருந்து முனையத்தில் முழுவதும் குளிரூட்டப்படும் பணிகள் குறித்தும், சென்னை – பெங்களுர் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் அணுகு சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இப்பேருந்து முனையத்தில் மாநகர பேருந்துகள் நிறுத்தம், புறநகர் பேருந்துகள் நிறுத்தம், பேருந்துகளை பராமரிப்பதற்கான பணிமனை, தனியார் பேருந்துகள் நிறுத்தம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின் நிலையம், மருத்துவ மையம், குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை, தானியங்கி பணப்பொறி (ATM), பொருள் பாதுகாப்பு அறை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையம், கடைகள் மற்றும் கழிவறைகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுவதைக் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள், திரு. குணசேகரன், நிர்வாக இயக்குநர், MTC , திரு. இளங்கோவன், நிர்வாக இயக்குநர், SETC, திரு. அன்வர் பாஷா, கூடுதல் துணை ஆணையர் (தாம்பரம் போக்குவரத்து) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம்: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் சாலை பணிகள் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,SegarBabu ,Klambakkam ,Hindu ,Religious Fisheries ,Chennai Metropolitan Development Group ,Clambakkam ,Dinakaran ,
× RELATED தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்...