- அண்ணாமலை
- உத்தவ்
- ராஜ் தாக்கரே
- மும்பை
- உத்தவ் தாக்கரே
- பாஜக
- மும்பை மாநகராட்சி
- மகாராஷ்டிரா
- மும்பை மாநகராட்சி
மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக சார்பாக பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘மும்பை ஒரு மராட்டிய நகரம் அல்ல; மும்பை ஒரு சர்வதேச நகரம்’ என்று பேசினார். மேலும், ‘சென்னை மற்றும் பெங்களூருவை விட 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதிநிலை கொண்ட மும்பையை நிர்வகிக்க ஒன்றிய அரசு, பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாஜக மேயர் என மூன்று சக்கரங்களை கொண்ட அரசு தேவை’ என கூறியிருந்தார்.
இந்த பேச்சு மராட்டிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், இதற்கு சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘மும்பை மாநகரை மராட்டியத்திடம் இருந்து பிரித்து மீண்டும் ‘பாம்பே’ என பெயர் மாற்றம் செய்ய பாஜக திட்டமிடுகிறது’ என குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், ‘மாநிலத்தின் தலைமைக்கு அண்ணாமலையின் பேச்சு ஒரு அறை அறைந்தது போன்றது உள்ளது. அண்ணாமலையை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ‘தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மராட்டியத்தில் என்ன வேலை?. எனது சித்தப்பா பால்தாக்கரே 1960ம் ஆண்டுகளில் தென் இந்தியர்களுக்கு எதிராக பயன்படுத்திய ‘லுங்கியை அகற்றுங்கள், புங்கியை ஊதுங்கள்’ (தென்மாநில மக்களை விரட்டுங்கள்; இசைக்கருவியை ஊதி மகிழுங்கள்) என்ற கோஷத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டியவரும். மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்க பாஜக நினைக்கிறது, மராட்டிய மக்களுக்கான கடைசி போர் இது’ என்று ஆவேசமாக எச்சரித்தார். மேலும் அண்ணாமலையை ‘ரஸ்மலை’ (வெளிமாநிலத்தை சேர்ந்தவர்) என்று கேலியாக விமர்சித்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் ஷைனா என்சி, ‘ராஜ் தாக்கரேவின் பேச்சு தரம் தாழ்ந்தது’ என விமர்சித்துள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 15ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
