×

மதுரையில் ஜனவரி 23ம் தேதி பாஜ-அதிமுக கூட்டணி கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

மதுரை: பாஜ-அதிமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜன.23ம் தேதி மதுரை வருகிறார். அப்போது திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வலுவான கூட்டணியினருடன் திமுக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறது. பாஜ கூட்டணியில் ஆள் சேர்க்க அலையோ அலை என்று அலைந்து வருகின்றனர். கூட்டணியில் ஆள் சேர்த்து பிரதமர் மோடி வரும் 28ம் தேதி கன்னியாகுமரிக்கு வரும்போது மேடையில் ஏற்ற வேண்டும் என பாஜ திட்டமிட்டது.

இந்நிலையில், திடீரென்று பிரதமர் மோடி வரும் 23ம் தேதி மதுரை வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை வண்டியூர் ரிங்ரோட்டில் வரும் 23ம் தேதி பாஜ சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்கான அனுமதி பெறுவதற்காக மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜ, அதிமுகவினர் நேற்று கூட்டாக வந்திருந்து மனு அளித்தனர். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சித்திரைத் திருவிழா மாதிரி, பிரதமர் மோடி வருகை தரும் ஜனவரி 23ம் தேதி மற்றொரு சித்திரைத் திருவிழாவாக இருக்கும்’’ என்றார்.

பாஜ மாநில பொதுச்செயலாளர் ராமனிவாசன் கூறும்போது, ‘‘பாஜ, அதிமுக, பாமக என கூட்டணி கட்சியினர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். புதிய கட்சிகளும் கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறது’’ என்றார். இந்நிலையில், பொதுக்கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Tags : BJP ,-AIADMK ,Madurai ,Modi ,-AIADMK alliance ,Thiruparankundram ,Tamil Nadu ,DMK ,
× RELATED தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால்...