×

நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்

வதோதரா: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்தியாவுடன் நியூசிலாந்து மோதிய முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டெவான் கான்வே (56 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (62 ரன்) அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 117 ரன் குவித்தது. பின் வந்தோரில் டேரில் மிட்செல் பொறுப்புடன் சிறப்பாக ஆடி 71 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 84 ரன் விளாசினார். அதனால், நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது. அதையடுத்து, 301 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

துவக்க வீரர் ரோகித் சர்மா 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சுப்மன் கில் 56 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி அட்டகாசமாக ஆடி ரன் வேட்டையில் ஈடுபட்டார். 91 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்த அவர் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். அவருடன் இணை சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 49 ரன்னில் அவுட்டானார். பின் வந்த வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 4, ஹர்சித் ராணா 29 ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், கே.எல்.ராகுல் 29, வாஷிங்டன் சுந்தர் 7 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தனர். அதனால், இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : India Amoka ,New Zealand ,Kohli ,Vlasal ,Vadodara ,India ,Ameha ,Audi ,
× RELATED ஆப்கோன் கால்பந்து: அசத்தலாய் வென்ற எகிப்து: அரையிறுதிக்கு முன்னேற்றம்