ரபாட்: ஆப்கோன் கோப்பை கால்பந்து போட்டிக்கான காலிறுதியில் நேற்று, எகிப்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்டை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. ஆப்பிரிக்க நாடுகள் மோதும் ஆப்கோன் கால்பந்து போட்டிகள் மொராக்கோவின் ரபாட் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் எகிப்து – ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் துடிப்புடன் ஆடிய எகிப்து அணியின் ஒமர் மர்மோஷ் தனது அணிக்காக, போட்டியின் 4வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அசத்தினார்.
தொடர்ந்து, 32வது நிமிடத்தில் எகிப்தின் ராமி ராபியா கோல் போட்டு விறுவிறுப்பை ஏற்படுத்தினார். சிறிது நேரத்தில் எகிப்தின் அஹமது அபோ எல் ஃபோதோ, தவறுதலாக போட்ட ‘ஓன் கோல்’ மூலம், ஐவரி கோஸ்ட் அணிக்கு முதல் கோல் கிடைத்தது. இரண்டாம் பாதியில் எகிப்தின் முகம்மது சலா அணியின் 3ம் கோல் போட்டு வலுவான நிலைக்கு அணியை கொண்டு சென்றார். கடைசி கட்டத்தில் ஐவரிகோஸ்ட் அணியின் குவெலா தோபே, 73வது நிமிடத்தில் கோலடித்தார். அதன் பின் இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. அதனால் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற எகிப்து அரை இறுதிக்கு முன்னேறியது.
