கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, தென் கொரியா வீராங்கனை ஆன் சே யங் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தென் கொரியா வீராங்கனை ஆன் சே யங், சீன வீராங்கனை வாங் ஸியி மோதினர். முதல் செட்டில் அட்டகாசமாக ஆடிய யங், 21-15 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதியதால் விறுவிறுப்பாக காணப்பட்டது. கடைசியில் அந்த செட்டை 24-22 என்ற புள்ளிக் கணக்கில் யங் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீரர் குன்லவுட் விதித்சர்ன் – சீன வீரர் ஷி யுகி மோதினர். முதல் செட்டில் இரு வீரர்களும் சம பலத்துடன் மோதியதால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. கடைசியில் அந்த செட்டை 23-21 என்ற புள்ளிக் கணக்கில் விதித்சர்ன் கைப்பற்றினார். 2வது செட்டில் விதித்சர்ன் 6-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக சீன வீரர் வெளியேறினார். அதனால், போட்டியில் வெற்றி பெற்ற விதித்சர்ன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
