×

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்: ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்படும்

 

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்கு தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் சொகுசு பேருந்து, வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்தாலும், இங்கு முறையான பேருந்து நிலையம் இல்லை. இதில், தலசயன பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 8 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். மற்ற பேருந்துகள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. இந்த நிலையில், கடந்த 1992ம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளது போன்று, ஒரு நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

பின்னர், மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோயிலுக்கும், கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடைபட்ட பகுதியில் சுமார் 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றி, வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த, 2006 – 2011 வரை ஊருக்கு வெளிப்புற பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு, பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஒன்றிய பொதுப்பணி துறையிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பணியை ஒப்படைத்தது.

பின்னர், அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, அங்கிருந்த கருவேல மரங்கள், வேலிகாத்தான் மரங்கள், செடி-கொடிகள் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. அதன்பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அப்பணி 33 ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, நவீன பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு டெண்டர் விட்டு, ஒதுக்கப்பட்ட ரூ.18 கோடியை ஒன்றிய பொதுப்பணி துறை மீண்டும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.

கடந்த, 2020ம் ஆண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் நேரில் வந்து அங்கு மண் பரிசோதனைளும் மேற்கொள்ளப்பட்டு, பேருந்து நிலையத்திற்கு உகந்த இடம் என சான்றிதழும் பெற்றனர். அதன்பிறகு, அங்கு எந்தவித பணிகளும் தொடங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அடிக்கடி, மாவட்ட கலெக்டர், சிஎம்டிஏ உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஆய்வு செய்தார்களே தவிர, பணிகள் தொடங்குவதற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அம்சங்களுடன், வெளிநாடுகளில் உள்ளது போன்று நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கட்டுமானப் பணியை தொடங்கப்பட்டது. பின்னர், அங்கு பணிகள் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் பணிகள் சற்று தடைபட்டது. இதனையடுத்து, தற்போது நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. தனியார், கட்டுமான நிறுவன ஊழியர்கள் அங்கேயே கூடாராம் அமைத்து இரவு – பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், கடந்த 1992ம் ஆண்டு மாமல்லபுரத்தில் அதிநவீன பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 33 ஆண்டுகளாக எந்த பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்க ரூ.90.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும், ஜூலை மாதத்திற்குள் கட்டுமான பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

Tags : Mamallapuram ,CMDA ,
× RELATED யாருடன் தேமுதிக கூட்டணி என்று முடிவு...