சென்னை: வனப் பாதுகாப்பு, காலநிலை தாங்குதிறனை வலுப்படுத்தும் 100 புதிய காப்பு வனங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு 2021 முதல் 2025ம் ஆண்டு வரை மாநிலம் முழுவதும் 100 புதிய காப்பு வனப்பகுதிகளை அறிவிக்கை செய்துள்ளது. இந்நடவடிக்கை வனப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்புகள் மூலம் காலநிலை தாங்குதிறனை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இந்தியாவின் தேசிய வனக் கொள்கை (1988), நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நாட்டின் புவியியல் பரப்பளவில் 33 சதவீதத்தை வனங்கள் மற்றும் பசுமை பரப்பின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு இந்த தேசிய இலக்கை நோக்கித் தொடர்ச்சியாக முன்னேறி வருவதுடன், தற்போது 24.47 சதவீத வனங்கள் மற்றும் பசுமைப் பரப்பைக் கொண்டு அறிவியல் பூர்வமாக மேலும் விரிவுபடுத்துவதற்கு ஒரு வலுவான சூழலியல் அடித்தளத்தை வழங்குகிறது.
இந்நிலையில், 100 வனப்பகுதிகளை காப்பு வனங்களாக தமிழ் நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள அறிவிக்கை, தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும், முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத முன்னோடி முயற்சியாகவும் திகழ்கிறது. இவ்வறிவிக்கைகள். கடுமையான மற்றும் சட்டபூர்வமான நடைமுறைக்குட்பட்ட தீர்வினை தொடர்ந்து. தமிழ்நாடு வனச் சட்டம் 1882. பிரிவு 16-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வன வட்டாரத்திற்கும் நிரந்தர சட்டப் பாதுகாப்பை வழங்குவதற்கு முன்பு உரிய வன நிர்ணய அலுவலரால் விரிவான கள சரிபார்ப்பு மேற்கொள்ளுதல், உரிமைக்கான தீர்வுகள் வழங்குதல் ஆகிய சட்டபூர்வ நடைமுறைகள் உன்னிப்பாக கடைபிடிக்கப்படுகின்றன.
இந்த அறிவிக்கைகளின் விளைவாக, கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பாதுக்காக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு சுமார் 135 சதுர கிலோமீட்டர் அளவிற்கு விரிவடைந்துள்ளது. திண்டுக்கல், தருமபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில், 13,494.95 ஹெக்டேர் பரப்பளவில் புதிதாக அறிவிக்கப்பட்ட இக்காப்பு வனங்கள் பரவியுள்ளன. இவற்றுள், புதிதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் வனவட்டாரமானது 2,836.33 ஹெக்டேர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய வனவட்டாரமாகும்.
இச்சூழலில், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர்.
ஆர். எஸ். ராஜகண்ணப்பன் 100 புதிய காப்பு வனங்கள் அறிவிக்கை செய்யப்பட்டதனை ஆவணப்படுத்தும் விதமாக நினைவுச் சிறப்புப் பதிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாகு. ஐ.ஏ.எஸ்., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) ஸ்ரீநிவாஸ் ஆர். ரெட்டி. ஐ.எப்.எஸ்.. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா. ஐ.எப்.எஸ்., மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான சிறப்புச் செயலாளர் அனுராக் எஸ். மிஸ்ரா. ஐ.எப்.எஸ். ஆகியோர் பங்கேற்றனர்.
காப்பு வனங்களின் விரிவாக்கமானது. ஒன்றோடொன்று தொடர்புடைய உயிரியல் பல்வகைப் பாதுகாப்பையும், காலநிலைச் செயல்பாடுகளையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சட்டபூர்வமான இக்காப்பு வனங்கள் முக்கிய வன உயிரின வாழ்விடங்களை பாதுகாத்து, சற்றுசூழல் வழித்தடங்களை உறுதிப்படுத்தி. நீர்நிலைகளை பாதுகாக்கின்றன. இதன் மூலம் கார்பன் சேமிப்பு அதிகரித்து, காலநிலை மாற்றத்திற்கெதிரான சூழலியல் தாங்குதன்மையும் மேம்படுகிறது. ஆகவே, நிரந்தர வனப் பாதுகாப்பு என்பது உயிரியல் பல்வகை பாதுகாப்பு, நீர்வள பாதுகாப்பு மற்றும் காலநிலை நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் பங்களிக்கும் இயற்கை அடிப்படையிலான தீர்வாக விளங்குகிறது.
தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான மற்றும் சட்டப்பூர்வமாக வலுவான நடவடிக்கைகளின் மூலம். தமிழ்நாடு அரசு வனப் பாதுகாப்பில் தொடர்ந்து தலைமைத்துவனத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும், காடுகளின் நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை தாங்குதிறனை மக்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு அவசியமான ஒரு முக்கிய சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பாக நிருபித்து வருகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
