×

2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வையுடன் மாபெரும் கனவு திட்டத்தை அறிவிப்பேன்: ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வையுடன் மாபெரும் கனவு திட்டத்தை அறிவிப்பேன் என்று ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசால் வழங்கப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தினை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை நேற்று காலை திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் வரலாற்றில், இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள். வரலாற்று சிறப்புமிக்க நாள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களுடைய அரசு, மக்களான உங்களிடம், உங்களுடைய கனவுகளை கேட்டு, அதையெல்லாம் நிறைவேற்ற தொடங்கப்பட்ட நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.

நான் எதற்காக இங்கு வந்திருக்கிறேன் என்றால், ‘உங்க கனவ சொல்லுங்க’ அதை நிறைவேற்றி தருகிறோம் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திருச்சியில் நடந்த மாபெரும் மாநாட்டில், நான் உரையாற்றுகின்றபோது 7 வாக்குறுதிகளை சொன்னேன். அந்த ஏழு வாக்குறுதிகள் என்னவென்றால், முதல் வாக்குறுதி – வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு. இரண்டாவது – மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி. மூன்றாவது – குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்.

நான்காவது – அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம். ஐந்தாவது – எழில்மிகு மாநகரங்களின் மாநிலம். ஆறாவது – உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கை தரம். ஏழாவது – அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு என்று 7 வாக்குறுதிகளை வழங்கியிருந்தேன். இது என்னுடைய கனவுகள் என்று சொல்லி, அந்த வாக்குறுதியை வழங்கினேன். இதையெல்லாம் இப்போது நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

சொன்னால் – சொன்னதை செய்பவன்தான், உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கக்கூடிய இந்த ஸ்டாலின். பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று சொன்னேன். இன்றைக்கு, நம்முடைய தமிழ்நாடுதான் 11.19 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவிற்குள் Invest செய்ய வேண்டும் என்று எந்த நிறுவனமாவது நினைத்தால், அவர்களின் First Choice-ஆக தமிழ்நாடுதான் இருக்கிறது. அதேபோல, விவசாயத்திற்கும், பாசனப் பரப்பு அதிகமாயிருக்கிறது; விளைச்சல் அதிகமாகியிருக்கிறது;

லாபம் தரும் தொழிலாக மாறியிருக்கிறது. இந்தியாவிலேயே கல்விக்காக தமிழ்நாடு செய்யும் அளவிற்கு, எந்த மாநிலமும் செய்வதில்லை என்று பெருமையுடன் சொல்லும் அளவிற்கு மாதிரி பள்ளிகள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மாணவர்களும், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போட்டி தேர்வுகள் என்று எல்லாவற்றிலும் அடித்து தூள் கிளப்புகிறார்கள்.

அடுத்து, மருத்துவம். தமிழ்நாட்டின் மருத்துவத் துறையை பற்றி சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாடுதான் இப்போது Medical Tourism-த்தின் மையமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பில் இருந்தபோது, தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம், ஆமாம் சாமி போட்டு அடகு வைத்த அதிமுக இப்போது எதிர்க்கட்சியான பிறகு, உண்மைக்கு புறம்பான போலி செய்திகளை எல்லாம் உருவாக்கி, அவதூறு பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னாலே, பல தொழில் நிறுவனங்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட்டு தலைதெறிக்க ஓடினார்கள். ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கிறோம். ரெக்கார்ட் செய்தால், ரெக்கார்டை பிரேக் செய்ய முடியாத அளவிற்கு செய்ய வேண்டும். இதுதான் என் பாலிசி.

2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, 4000 கோயில்களில் குடமுழுக்கு, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான கோயில் சொத்துகள் மீட்டிருக்கிறோம், அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பென்ஷன் திட்டம், கடந்த நான்கரை ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு முறை, மூன்று முறை நாம் பயணம் செய்து, அரசு விழாக்கள் மூலமாக, 40 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்கிறோம்.

இப்போதுகூட, இந்த பொங்கல், மகிழ்ச்சி பொங்கலாக இருக்க வேண்டும் – அதற்காக தான் பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் தருகிறோம். இப்படி உங்கள் தேவைகளை உணர்ந்து, நல்ல பல திட்டங்களை செய்துகொண்டிருக்கும் உங்கள் திராவிட மாடல் அரசிடம், உங்களுடைய கனவுகளை நீங்களே சொல்ல வேண்டும் என்று உருவாக்கியிருப்பதுதான், இந்த ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்.

இன்றிலிருந்து முப்பது நாட்களுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்பங்களையும், அரசின் சார்பாக தன்னார்வலர்களை நியமிக்கப்படுகின்ற எங்கள் Team-ஐ சேர்ந்தவர்கள் உங்களை சந்திப்பார்கள். அவர்களிடம் உங்களின் கனவுகளை சொல்லுங்கள். அதையெல்லாம் அவர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்துகொள்வார்கள். அது எல்லாவற்றையும் ஆய்வு செய்து, தமிழ்நாட்டிற்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப்போகிறேன்.

2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வை கொண்டதாக, அந்த கனவுத்திட்டம் இருக்கும். நான் உறுதியாக சொல்கிறேன். இந்த கனவுகளை எல்லாம் நான் நிறைவேற்றி காட்டும்போது, கிராமப்புற உள்கட்டமைப்புகள், நகர்ப்புற உள்கட்டமைப்புகள், மொழி மற்றும் பண்பாட்டு வெற்றிகள், கல்வி மற்றும் திறன் மேம்பாடுகள், சமூகங்களின் வளர்ச்சி, விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய 7 துறைகளில், தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக நம்முடைய மாநிலம் வளர்ந்திருக்கும்.

ஆட்சி என்பது, முதலமைச்சரான என்னுடைய கனவுகளை மட்டுமல்ல, வாக்களித்த, வாக்களிக்காத உங்கள் எல்லோருடைய கனவுகளையும் நிறைவேற்றுவதற்கான கருவி. அப்படி, உங்கள் கனவுகளை கேட்டு, நிறைவேற்றும்போதுதான், உங்கள் குடும்பங்கள் முன்னேறும். மகிழ்ச்சி அடையும். உங்கள் கனவுகள் நிறைவேறினால், தமிழ்நாடும் முன்னேறும்! வளர்ச்சி அடையும்.

வரலாற்றை புரட்டி பாருங்கள். நாம் கனவு கண்டால், நிச்சயம் நம்முடைய உழைப்பால் அதை நிறைவேற்றுவோம். சுயமரியாதையும் – சமத்துவமும் – பகுத்தறிவுமிக்க சமூகமாக, நம்முடைய தமிழ்ச் சமூகம் தலைநிமிர வேண்டும்; சமூகநீதி நிலைபெற வேண்டும்; ஒடுக்கப்பட்டோரின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்; எல்லோருக்குமான ஆட்சி அமைய வேண்டும் என்று பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கனவு கண்டார்கள்.

அதனால்தான் இன்றைக்கு நாம், எந்த ஆதிக்கத்திற்கும் தலைகுனியாமல் – வெல்வோம் ஒன்றாக என்று மண், மொழி, மானம் காக்க, நிமிர்ந்து நிற்கிறோம். நாடே திரும்பி பார்க்கும் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறோம்.
இப்போது நாம் அடுத்தகட்ட கனவை காணவேண்டிய நேரம். உறுதியாக சொல்கிறேன் – உங்கள் கனவுகளை நான் நிறைவேற்றுவேன்.

உங்கள் கோரிக்கைகளை நான் திட்டங்களாக உருவாக்கித் தருவேன். உங்கள் எண்ணங்களுக்கு நான் உருவம் கொடுப்பேன். நம்முடைய தமிழ்நாட்டை, தலைசிறந்த மாநிலமாக உயர்த்துவேன். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 2026 தேர்தலுக்கு தரக்கூடிய வாக்குறுதி. நம்முடைய கனவு நனவாகும். தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் பேசினார்.

* பட்டா, மினி பஸ் வேண்டும்
நிகழ்ச்சியில் பேசிய பெண் கவிதா, ‘‘வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்றார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 23 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்ட்டுள்ளது. ஆட்சி தலைவருடன் பேசி பட்டா வழங்கப்படும். பிரியங்கா என்பவர் பேசும்போது, ‘‘கீழ்மேனி கிராமம், கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறேன். புதுமைப்பெண் திட்டத்தில் 1000 ரூபாய் கிடைக்கிறது.

லேப்டாப் வாங்கி விட்டேன். அப்பா விவசாயி. மானியத்தில் டிராக்டர் கொடுத்துள்ளனர். எங்களுடைய கிராமத்தில் மினி பஸ் வழங்க வேண்டும்” என்றார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘”நல்லா பேசுனீங்க. லேப்டாப் கிடைத்துள்ளது. நல்ல படிங்க. மினி பஸ் விட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கற்பகம் என்பவர் பேசும்போது, ‘‘மகளிர் பேருந்தில் இலவசமாக பயணம் செய்து வருகிறேன். 2 குழந்தைகள் உள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற்று வருகிறேன். எங்க ஊரில் மழை பெய்தால் தீவு போன்று உள்ளது. எங்கும் போக முடியாது. பள்ளிக்கு போக முடியாது. பாலம் கட்டித்தர வேண்டும்” என்றார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘பாலம் கட்ட, நெடுஞ்சாலை துறை அமைச்சர், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ராணிப்பேட்டை அமுதா பேசும்போது, ‘‘திமுக அரசு மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் வழங்கி வருகிறது.

மகளிர் உரிமை தொகை, மகளிர் விடியல் பயணம், நலன்காக்கும் ஸ்டாலின், மகளிர் சுயநிதி உதவி குழு. நான் மகளிர் சுயநிதி உதவி குழு மூலமாக ஒரு மிஷின் வாங்கி மாவு அரைத்து வியாபாரம் செய்கிறேன். எனது கணவர் மேஸ்திரி. வங்கி கடன் பெற்று தர வேண்டும். மகளிர் சுய உதவி குழுவில் எம்பிசி-க்கு மானியத்தில் லோன் கிடைப்பதில்லை. இதெல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘எல்லாமே கொடுத்தா நல்லா இருக்கும் என்கிறீர்கள். எவ்வளவோ கிடைத்தாலும் உங்களுக்கு குறை இருக்கிறது. எல்லாம் கிடைக்க வழி செய்கிறோம். அமுதா வாழ்க” என்றார்
காஞ்சிபுரம் சங்கீதா, ‘‘மகளிர் சுயஉதவி குழுவில் இருக்கிறேன். லோன் வாங்கி ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கிறேன். மகளிர் விடியல் பயணம் மூலம் வேலைக்கு செல்ல மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதன்மூலம் அப்பாவுக்கு டயாலிசியஸ் செய்கிறேன். உங்களுக்கு ரொம்ப நன்றி. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் அதிக கடன் வழங்க வேண்டும்” என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நீங்கள் சொன்ன கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்றார். செங்கல்பட்டு அம்முகுட்டி, ‘‘நான் மீனவ சமுதாய பெண். மீன்பிடி தடை காலத்தில் நீங்கள் கொடுக்கும் நிதியை வைத்து குடும்பமே பயன்பெறுகிறது.

எனது பெண் செய்யூர் கல்லூரியில் படிக்கிறார். எனக்கு 2 பெண் குழந்தைகள். அவர்களுக்கு உயர் கல்வி தர வேண்டும் என்பதே எனது லட்சியம். மழை காலங்களில் மீன்பிடி வலையை பாதுகாக்க அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்” என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.

திருநெல்வேலி, கல்பனா, ‘‘எனக்கு 3 குழந்தைகள். வடியில் பயணம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எனது மகன் தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 வாங்கி வருகிறான். எனக்கு சொந்த வீடு கிடையாது. கலைஞர் கனவு திட்டத்தில் ஒரு வீடு கட்டித்தர வேண்டும்” என்றார்.

* 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றம்
தமிழ்நாட்டிற்கும், ஒன்றிய அரசிற்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் என்ற பொறுப்பில் இருப்பவர், என்ன செய்கிறார் என்றால் உங்களுக்கே தெரியும். உங்களின் எண்ணங்களை பிரதிபலித்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதே தன்னுடைய முதல் வேலை என்று ஆளுநர் செயல்படுகிறார்.

இத்தனையும் மீறி, மக்களான நீங்கள் எங்கள் கூடவே இருப்பதால்தான், 2021ல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த சாதனையை செய்தது, திராவிட மாடல். ஒன்றிய அரசே நிதி தர மறுத்து புறக்கணித்தாலும், அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களில் எல்லாம் தவிர்க்கவே முடியாத அளவிற்கு முதலிடத்தில் இருக்கும் சாதனையை செய்தது, நம்முடைய திராவிட மாடல் அரசு என்று முதல்வர் கூறினார்.

Tags : K. Stalin ,Chennai ,
× RELATED யாருடன் தேமுதிக கூட்டணி என்று முடிவு...