×

ஷாருக்கான் கேகேஆர் அணிக்காக வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை வாங்கியது குறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ சங்கீத் சிங் சோம் சர்ச்சை பேச்சு

லக்னோ: மீரட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ சங்கீத் சோம், அண்டை நாடான வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழலையும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையும் தொடர்புபடுத்தி கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டிய சங்கீத் சோம், அங்குள்ள சூழல் கவலைக்கிடமாக இருக்கும்போது, வர்த்தக நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

“வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டு வீரர்களை ஏலம் எடுப்பது உணர்வற்ற செயலாகும். ஷாருக்கான் போன்றவர்கள் இந்தியாவால் வளர்க்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் இந்தியாவிற்கு எதிராகச் செயல்படும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு இந்தியாவில் வாழத் தகுதியில்லை,” என்று அவர் சாடினார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த ஒப்பந்தம் தான் தற்போது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் விளையாட இந்தியா வந்தால், அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே கூட வர முடியாது என்று சங்கீத் சோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சங்கீத் சோமின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சில இந்து மதத் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள், வங்கதேசத்துடனான விளையாட்டு உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற சங்கீத் சோமின் கருத்தை ஆதரித்துள்ளனர்.

Tags : BJP ,MLA ,Sangeet Singh Som ,Shah Rukh Khan ,Mustafizur Rahman ,KKR ,Lucknow ,Meerut ,Sangeet Som ,Bangladesh ,IPL cricket ,Bangladesh… ,
× RELATED டெல்லியில் நாளை புத்தர் கண்காட்சியை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!