பரிதாபாத்: அரியானாவில் ஓடும் வேனில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் மெட்ரோ சவுக் பகுதியில், கடந்த டிசம்பர் 29ம் தேதி இரவு 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் வாகனத்திற்காகக் காத்திருந்தார். அப்போது வேனில் வந்த இரண்டு பேர் அவருக்கு லிப்ட் கொடுப்பதாகக் கூறி வாகனத்தில் ஏற்றிக்கொண்டனர். ஆனால் அந்தப் பெண்ணை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், குருகிராம் – பரிதாபாத் சாலையில் சுமார் 3 மணி நேரம் வேனை ஓட்டிக்கொண்டே அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், ராஜா சவுக் அருகே அந்தப் பெண்ணை கொடூரமான முறையில் கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். வேகமாகச் சென்ற வாகனத்தில் இருந்து வீசப்பட்டதால் பலத்த காயமடைந்த அந்தப் பெண், தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார். முகத்தில் எலும்பு முறிவு மற்றும் தசைகள் கிழிந்த நிலையில் அவருக்கு 12 தையல்கள் போடப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, அவரால் பேச முடியாத சூழல் உள்ளதால் வாக்குமூலம் பெற முடியவில்லை என்று டாக்டர்கள், போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜான்சி மற்றும் மதுராவைச் சேர்ந்த இரண்டு டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த அரியானா காங்கிரஸ் தலைவர் ராவ் நரேந்திர சிங், ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
