வேலூர்: பயிர் விளைச்சல் போட்டியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களில் உயர் தொழில் நுட்பங்களை கடைபிடித்து மாவட்ட மற்றும் மாநில அளவில் அதிக மகசூல் பெற்று வெற்றி பெறும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.மாவட்ட அளவில் துவரை மற்றும் கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கலந்து கொள்ள ரூ.100 வீதம் பதிவு கட்டணம் செலுத்தி தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அளவில் கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களுக்கு போட்டியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் ரூ.150 வீதம் செலுத்தி அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்ளும் பயிர் குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திருக்க வேண்டும். அரை ஏக்கர் அறுவடை செய்ய வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் அறுவடைக்கு 30 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். போட்டிக்கான நடுவர் குழு முன்னிலையில் அறுவடை செய்ய வேண்டும். மாவட்ட அளவில் ஒரு பயிருக்கு 3 விவசாயிகளின் வயல்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டு, அதிக மகசூல் எடுக்கும் 2 விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15,000, 2ம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும். மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ.1.50 லட்சமும், 2ம் பரிசு ரூ.1 லட்சமும், 3ம் பரிசு ரூ.75 ஆயிரம் வழங்கபட உள்ளது. எனவே விவசாயிகள் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
