×

புராணங்களில் அறக் கதைகள்

வஜ்ராயுதம் வந்த கதை

இந்திரன் வைத்திருக்கும் வெள்ளை யானைக்கு “ஐராவதம்’’ என்று பெயர். அவன் வைத்திருக்கும், யாராலும் வெல்ல முடியாத ஆயுதத்திற்கு “வஜ்ராயுதம்’’ என்று பெயர். வஜ்ரம் என்றால் உறுதி என்று பொருள். தேக்கு மரம் உறுதியாக இருப்பதால், வஜ்ரம் என்று சொல்வோம். அதைப் போல, இந்திரனிடம் உள்ள உறுதியான ஆயுதம் வஜ்ராயுதம். இந்த ஆயுதம் அவனுக்கு கிடைத்த கதை ஸ்வாரஸ்யமானது. அந்த ஆயுதம் மரத்தினாலோ இரும்பினாலோ செய்யப்பட்டது அல்ல. ஒரு முனி வரின் முதுகெலும்பிலிருந்து செய்யப்பட்டது. முனிவரின் பெயர் ததீசி. அந்தக் கதை என்ன என்று பார்ப்போம்.

ததீசி முனிவர் மனைவி லோபாமுத்ராவுடன் கங்கைக்கரையில் ஓர் அழகிய ஆசிரமத்தில் வாழ்ந்துவந்தார். அவர் சாபம் கொடுத்து விடுவார் என்ற அச்சம் காரணமாக தைத்தியர்கள், அரக்கர்கள், அசுரர்கள் அவருடைய எல்லைக்குள் நுழைய முயன்றதேயில்லை. ஒருமுறை நடந்த தேவ, அசுரப்போரில், தேவர்கள் வென்றனர்.

வெற்றியடைந்த அவர்கள், ததீசியிடம் வந்து; “ஐயனே! உனது ஆசீர்வாதத்தால் நாங்கள் வென்றோம். இனி இந்த ஆயுதங்கள் தேவையில்லை. இதை நீங்கள் வைத்துக்கொண்டு பாதுகாத்து, தேவைப்படும் போது கொடுங்கள்’’ என்றனர். “அதை ஏன் இங்கு வைக்கிறீர்கள்?’’ என்று முனிவர் கேட்டார்.

“வேறு இடத்தில் வைத்தால் அசுரர்கள் கவர்ந்து செல்வர். அசுரர்கள் கவர்ந்து செல்ல முடியாத ஓரிடத்தில் இவற்றைப் பாதுகாப்பாக வைக்க விரும்பினோம். அவர்கள் அண்ட முடியாத இடம் என்று நினைத்தவுடன் இந்த ஆசிரமம்தான் நினைவுக்கு வந்தது. ஆகவே இவற்றை இங்கு விட்டுச் செல்கிறோம்’’ என்று கூறிச் சென்றார்கள். ஆண்டுகள் பல சென்றன. ஆயுதங்கள் பளபளப்புக் குன்றி தங்கள் மந்திர சக்தியை இழக்கத் தொடங்கின.

இந்த நிலையில் மனைவி லோபாமுத்திரை, “ஐயனே! தாங்கள் செய்தது சரியில்லை. நாம் தவம் செய்ய வந்திருக்கிறோம். நமக்கு வேண்டியர்கள் வேண்டாதவர்கள் என்ற பேதம் இல்லை. உலக பந்தத்தில் இருந்து விடுபட்டபிறகு ஆயுதங்களை இப்படி வைத்துக் கொண்டிருப்பது சரியில்லை’’ என்று கூறினாள். அதுகேட்ட முனிவர், “நீ சொல்வது சரிதான். ஆனால் வாக்குக் கொடுத்துவிட்டேன். அதை மீற முடியாது” என்றுகூறி, ஆயுதங்கள் ஒளி இழப்பதை அறிந்த முனிவர், அவற்றை கங்கை நீரில் கழுவி அந்நீரைக் குடித்துவிட்டார். ஆயுதங்களின் சக்தி முழுவதும் அவரது உடம்பில் சேர்ந்துவிட்டது. பல ஆண்டுகள் ஓடி மறைந்தன.

திடீரென்று ஆசிரமத்திற்கு வந்த தேவர்கள், “முனிவரே! அசுரர் கை ஓங்கிவிட்டது. ஆயுதங்களைக் கொடுங்கள்’’ என்று கேட்டனர். முனிவர் நடந்தவற்றைக்கூறி, “நான் யோகத்தால் என் உயிரைப் போக்கிக் கொள்கிறேன். என் உடம்பில் உள்ள முதுகெலும்பைக் கொண்டு நீங்கள் புதிய ஆயுதம் செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறினார். அவர் அப்படியே உயிரைவிட அவர் எலும்பைக் கொண்டு “விஸ்வகர்மா’’ எனும் தேவ தச்சன், “வஜ்ராயுதம்’’ என்ற ஆயுதத்தைப் படைத்தான். அதை எடுத்துக் கொண்டு, தேவர்கள் போய்விட்டனர். இதுதான் வஜ்ராயுதம் பிறந்த கதை.

நான்முகனுக்கு ஏன் நான்முகன் என்ற பெயர்?

இனி, நான்முகனுக்கு ஏன் நான்முகன் என்ற பெயர் என்று ஒரு கதை இருக்கிறது. அதை பார்ப்போம். நான்கு முகம் கொண்டதால் நான்முகன்.இதில் என்ன கதை என்று கேட்கலாம்.சுவாரஸ்யம் என்னவென்றால், நான்முகனுக்கு ஐந்து முகம் இருந்தது. ஒரு முறை தேவ அசுர யுத்தம் நடந்தது.தேவர்கள் தோற்றனர். பிரம்மாவிடம் ஓடிச் சென்று தங்கள் பரிதாபமான நிலையைக் கூறி வருந்தினர். அப்பொழுதெல்லாம் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. நான்கு தலைகள் வடிவுக்கேற்ற தலையாகவும், ஐந்தாவது தலை ஒரு கழுதையின் தலையாகவும் இருந்தது. அவர்கள் குறையைக் கேட்ட பிரம்மன், “நீங்கள் சிவபிரானிடம் சென்று முறை இடுங்கள்’’ என்றார்.

தேவர்கள் சிவனிடம் முறையிட, அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிவன், அசுரர்களுடன் போர் தொடுத்தார். அசுரர் படை சின்னாபின்னமாகியது. சிவபிரான், தான் ஒருவராக நின்று போர் தொடுத்தமையின், அவர் உடம்பிலிருந்து வியர்வைத் துளிகள் வெளிப்பட்டுத் தரையில் சிந்தின. அந்தத் துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாத்ரிகள் எனப்படும் சிவகணங்கள் தோன்றின. இப்பொழுது இந்த மாத்ரிகளும் அசுரர்களை விரட்டியடித்தனர்.

அசுரர்கள் ஓடி மறைகின்ற நிலையில், கங்கைக் கரையில் ஏனைய தேவர்களோடு தங்கியிருந்த பிரம்மாவின் கழுதை வடிவுடைய ஐந்தாவது தலை அசுரர்களை அழைத்தது.
“நீங்கள் ஏன் அஞ்சி ஓடுகிறீர்கள்? மீண்டும் வந்து சண்டையைத் துவக்கினால் உங்களுக்கு உதவியாக நான் இருக்கிறேன்’’ என்றது. இதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவர்களுக்கு, இதென்ன தங்களுக்கு துணை செய்ய வேண்டிய பிரம்மனின் ஐந்தாவது தலை அசுரர்களுக்குத் துணை போகிறது என்று அஞ்சி, விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

விஷ்ணு, “பிரம்மனுடைய ஐந்தாவது தலையை நான் கிள்ளி விடமுடியும். கிள்ளப்பட்ட தலை கீழே விழுந்தால், பூமி சுக்கு நூறாகிவிடும். அதனால் நீங்கள் சிவனிடம் சென்று முறையிடுங்கள்’’ என்று கூறினார். தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், “கவலை வேண்டாம். நானே அந்தத் தலையைக் கிள்ளி எடுத்து, அந்த மண்டை ஓட்டை என் கையிலேயே வைத்துக் கொள்கிறேன்’’ என்று கூறினார். பிரம்மனுடைய ஐந்தாவது தலையைக் (கழுதைத் தலை) கிள்ளி எடுத்து, அந்த மண்டை ஓட்டைச் சிவபிரான் கையிலேயே வைத்துக் கொண்டார். அன்றிலிருந்து பிரம்மா “சதுர்முகன்’’ (நான்முகன்) என்று அழைக்கப்பட்டார்.

பிரம்மாவின் தலை கிள்ளப்பட்ட இடம், “பிரம்ம தீர்த்தம்’’ என்றழைக் கப்பட்டது. சிவபிரானின் வியர்வையில் கிளம்பிய மாத்ரிகள், அசுரர்களைக் கொன்ற இடம் “மாத்ரி தீர்த்தம்’’ என்று வழங்கப்படுகிறது. அதன் பிறகு, சிவன் கபலத்தோடு அலைந்தாலும் பிறகு காசியில் அன்னபூரணி அன்னமிட கபாலம் கைவிட்டு நீங்கியது தனிக் கதை.

ஏகாதசி மகிமை

அவந்தி நகரத்தின் எல்லைக்கப்பால் பிரஷ்டம் செய்யப்பட்ட “சண்டாளன்’’ ஒருவன் வாழ்ந்து வந்தான். அவந்தி நகரைச் சுற்றி ஓடும் சிர்பா நதியின் கரையில் ஒரு விஷ்ணு ஆலயம் இருந்தது. இந்தச் சண்டாளன் மிகப் பெரிய விஷ்ணு பக்தன். ஏகாதசி அன்றைக்கு முழுப்பட்டினி இருந்து அன்று இரவு விஷ்ணு கோயிலுக்குச் சென்று மனமுருகிப் பாடும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தான். ஒருமுறை ஏகாதசி வழிபாட்டிற்குப் புறப்பட்ட அவன், நதிக்கரையில் இருந்த மரங்களில் பூப்பறிக்கத் துவங்கியபோது, ஒரு சிக்கலில் அகப்பட்டுக்கொண்டான்.

அந்த மரத்தில் இருந்த பிரம்ம ராட்சதன், “நில், பசியால் துடிக்கின்றேன். உன்னைத் தின்னப்போகிறேன்’’ என்றான். அதை கேட்ட சண்டாளன், சிறிதும் அச்சம் இல்லாமல், “நல்லது, உனக்கு உணவாவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இப்பொழுதில்லை. 20 ஆண்டுக்காலமாக ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகிறேன். இன்று ஏகாதசி என்னை இப்பொழுது விட்டுவிட்டால் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு வந்து, நாளை காலை உனக்கு உணவாகிறேன்’’ என்று உறுதியோடு கூறினான் சண்டாளன். அதைக் கேட்ட பிரம்ம ராட்சதன், அவனுடைய உறுதிப்பாட்டைக் கண்டு அவன் போய்வர அனுமதி தந்தது.

சண்டாளன் தன் வார்த்தை தவறாமல் மறுநாள் காலை வந்து பிரம்ம ராட்சதனிடம், “இன்று, இப்பொழுது என்னை உண்ணலாம்’’ என்றான். ஆச்சரியம் அடைந்த பிரம்ம ராட்சதன்,“எவ்வளவு நாளாக இந்த ஏகாதசி விரதம் இருக்கிறாய்?’’ என்று கேட்க, “20 ஆண்டுகள்’’ என விடையளித்தான் சண்டாளன். அதைக் கேட்ட பிரம்ம ராட் சதன், “நான் ஆதியில் அந்தணனாகத்தான் இருந்தேன். பூணூல் போடுவதற்கு முன்பு, எந்த யாகத்திலும் பங்கு கொள்ளக் கூடாது என்று இருந்தும், திருட்டுத்தனமாக ஒரு யாகத்தில் கலந்து கொண்டேன்.

என் தந்தையார் பெயர் சோமசர்மா. என் பெயர் சர்மா. இப்பொழுது உன்னைச் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு ஏகாதசி புண்ணியத்தை எனக்குத் தந்தால், இந்த நிலைமை நீங்கிவிடும்’’ என்று பிரம்ம ராட்சதன் கேட்க, அவன் மேல் இரக்கம் கொண்ட சண்டாளன், ஒரு ஏகாதசி புண்ணியத்தில் இரண்டு மணி நேரப் பங்கை அவனுக்குத் தந்து, அந்த இழிபிறவியிலிருந்து விடுதலை அடையச் செய்தான். இந்தச் சண்டாளன் மேற்கொண்ட தீர்த்த யாத்திரையின்போது, தன் பழம்பிறப்பை உணர்ந்தான்.

துறவியாக ஆசிரம வாழ்க்கை நடத்தும் பொழுது, பிட்சை ஏற்றுக் கொண்டு வந்த உணவில் மண் விழுந்துவிட்டது என்பதற்காக, அந்த உணவைத் தூக்கி எறிந்து விட்டான். அதன் காரணமாகவே இப்பொழுது சண்டாளனாகப் பிறந்தான். அதன்பிறகு, தீர்த்த யாத்திரை சென்று மன்னிப்புப் பெற்றான். பிரம்ம புராணத்தின் பிற்பகுதி, யோகம் என்பது பற்றியும், அது செய்யப்பட வேண்டிய முறை பற்றியும், விரிவாகப் பேசுகிறது. கதையைத் தொடங்கியபடியே நைமிசாரண்யவனத்தில் “உரோமஹர்ஷனர்’’ இக்கதையை முடித்தார் என்று இப்புராணம் முடிகிறது.

முனைவர் ஸ்ரீராம்

Tags : Indra ,Vajrayuth ,Airawatam ,Indran ,Vajrayutam ,Vajram ,
× RELATED பாவங்கள் போக்கும் பவானி யோகினி