×

இறைத்தூதர்களை வழிபடலாமா?

முஸ்லிம்கள் அல்லா சாமியை வழிபடுகிறார்கள். முஹம்மது அல்லா, சாமியின் மகன். அந்த மகனையும் முஸ்லிம்கள் கும்பிடுகிறார்கள்” சகோதரச் சமுதாயங்களைச் சேர்ந்த சிலரிடம் இப்படி ஒரு கருத்து காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், மேலை நாட்டவர்கள் முஸ்லிம்கள் முஹம்மதை வணங்குகிறார்கள் என்றும், அவர்களின் மதம் ‘முஹம்மதியம்’ என்றும், அதனைப் பின்பற்றுபவர்கள் ‘முஹம்மதியர்கள்’ என்றும் கருதி, அதனையே பரப்பினார்கள். உண்மை என்னவெனில், முஸ்லிம்கள் முஹம்மதையோ வேறு எந்த இறைத்தூதரையுமோ வழிபடுவதில்லை. எந்த ஒரு மானிடப் பிறப்பையும் வணங்குவதில்லை. வணங்கியதும் இல்லை. இறைத்தூதர்கள், மனிதர்களுக்கு நேர்வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர்கள்.

இறைவன் யார், அவனுடைய தன்மைகள், பண்புகள் என்ன, அவன் எதை விரும்புகிறான், எதை வெறுக்கிறான், எதை அனுமதிக்கிறான் (ஹலால்), எதைத் தடைசெய்துள்ளான் (ஹராம்), மனிதன் இவ்வுலகில் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வது எப்படி, மறுமை ஈடேற்றத்திற்கு என்ன வழி போன்றவற்றைச் செயல்பூர்வமாகக் கற்றுத்தருவதற்கே இறைத்தூதர்கள் அனுப்பப்படுகின்றனர். முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்கள் வருகை தந்துள்ளனர். அந்த வரிசையில், இறுதியாக வந்தவர்தாம் முஹம்மது (ஸல்) நபி அவர்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்பாக ஆதம், நூஹ், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாகூப், யூசுப், மூஸா, ஈஸா எனப் பல இறைத்தூதர்கள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் “ஏகப் பரம்பொருளாம் இறைவனை மட்டுமே வழிபட வேண்டும்” என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்கள். முஹம்மத் உட்பட எந்த ஓர் இறைத்தூதரும் மக்களிடம் “எங்களை வணங்குங்கள், ஈடேற்றம் பெறுவீர்கள்” என்று சொல்லவில்லை. “ஏக இறைவனை வழிபடுங்கள். எங்கள் மூலமாக இறைவன் அருளிய சட்டங்களைப் பின்பற்றுங்கள். அதுதான் ஈடேற்றத்திற்கு வழி” என்றே வலியுறுத்தினார்கள்.

முஹம்மத் (ஸல்) இறைத்தூதர்களில் இறுதியானவர். அவர் சுயமே எந்த மதத்தையும் நிறுவவில்லை, எந்தச் சட்டத்தையும் அருளவில்லை. மாறாக, இறைவன் அவருக்கு அருளிய ‘இஸ்லாம்’ எனும் வாழ்வியலைத்தான் அவர் தாமும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் எடுத்துரைத்தார். இறுதி வேதத்தின் வடிவில் இறைவன் அருளிய சட்டங்களைத்தான் மக்களுக்குப் போதித்தார்.ஆகவே, இந்த வாழ்வியலின் பெயர் “முஹம்மதியம்” அல்ல, அந்த வாழ்வியலைப் பின்பற்றுபவர்களின் பெயர் “முஹம்மதியர்கள்” அல்லர். இறைவன் அருளிய வாழ்வியலின் பெயர் “இஸ்லாம்” (இறைவனிடம் முழுமையாகச் சரணடைதல்) ஆகும். அதைப் பின்பற்றுபவர்களின் பெயர் “முஸ்லிம்” (இறைவனிடம் முழுமையாகச் சரணடைந்தவர்) எனும் தெளிவைப் பெறுவோம்.
– சிராஜுல் ஹஸன்

Tags : Muslims ,Alla Sami ,Muhammad Alla ,Sami ,MUHAMMAD ,
× RELATED பாவங்கள் போக்கும் பவானி யோகினி