×

திருமாங்கல்ய தாரணம்

திருமாங்கல்ய தாரணம் ஆன உடனேயே மணமகளின் இடுப்பிலே தர்பையினால் ஆன ஒரு கயிறு கட்டப்படுகிறது. இந்த சடங்கை ஒரு சிலர் செய்யாமலும் இருக்கின்றனர். ஆயினும், இந்த சடங்கின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மௌஞ்சிதாரணம் என்று பெயர். அப்பொழுது சொ ல்லப்படும் மந்திரம் ஆதாதான சௌமனஸம் தஜாம் ஸொபாக்யம் தநூம் அக்னே அனுவ்ரதா ஊத்வா சன்னக்யே சுக்ரதாயகம். இந்த தர்பைக் கயிற்றை கட்டுதன் மூலம் மணமகள் தீர்க்க ஆயுளையும், சகல சந்தான சௌபாக்கியங்களையும் பெறுகின்றாள். தன் கணவனுடன் வைதீக சடங்குகள் அனைத்திலும் பங்கேற்க தயாராகின்றாள் என்பதன் அறிகுறியாக மணமகன் தன் மனைவியின் இடுப்பில் இந்த கயிற்றை கட்டுகிறார். திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்தபின் இந்த தர்பைக் கயிறு அகற்றப்படுகிறது.

இதுவரை செய்யப்பட்ட சடங்குகள்தான் திருமணம் என்று நாம் நினைக்கின்றோம். ஆனாலும், இது திருமணம் என்னும் சடங்கின் முன்பகுதி ஒரு பாகமே. இனி மேலும் சில முக்கியமான சடங்குகள் உண்டு. அதையும் பார்க்கிறோம். ஒரு திருமணம் முழுமையாக நிறைவேறியது மாங்கல்ய தாரணத்துடன் அல்ல. அதற்குபிறகு, பல விஷயங்கள் இருக்கின்றன. நான் ஏற்கனவே கூறியதுபோல காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபின் அடிப்படையில் மங்கல சூத்திரத்தைப் பூட்டுகின்றோம். ஆபஸ்தம்ப பெரிய சூத்திரத்தில் திருமாங்கல்ய தாரணம் பற்றிய குறிப்புக்கள் இல்லை. எனவேதான், திருமாங்கல்ய தாரணம் செய்தவுடன் திருமணம் முடிந்து விட்டதாக நாம் கருதிக் கொண்டு இடையிலே புகுந்து மேடையில் ஏறி மணமகன் மணமகளுடன் கைகுலுக்குவது, பரிசுப் பொருட்களைத் தருவது போன்ற காரியங்களைச் செய்கின்றோம்.

திருமணம் என்பது எப்பொழுது முடிந்ததாகக் கருதப்பட வேண்டும் என்றால் சப்தபதி என்னும் சடங்கு முடிந்த பின்னால்தான் திருமணம் நிறைவு பெற்றதாகப் பொருள். அதுவரை, மணமகன் மோதிர விரலில் பவித்திரத்தை கழற்றக்கூடாது. பவித்திரத்தோடு ஆசமனமே செய்யக் கூடாதென்றால் பிறரோடு கைகுலுக்குவதோ, தொடுவதோ சரியல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதனால் இதுவரை அவர்களிடம் சேர்த்த மந்திர சக்தி குறைந்துவிடும். அடுத்து, புஷ்பங்களைக் கொண்டு ஆசிர்வாதம் செய்வது என்று பலரும் செய்கின்றார்கள். ஆசீர்வாதம் என்பது மங்கல அரிசியான அட்சதையைக் கொண்டே செய்ய வேண்டும். இனி, பாணிக்ரகணம் என்கிற உணர்ந்த சடங்கு.கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி என்று இந்த பாணிக்ரகணத்தை ஆண்டாள் நாச்சியார் குறிப்பிடுகின்றார்.

மண மகன் தனது வலது கையைத் தாழ்த்தி மேலே பெண்ணின் குவிந்த வலது கையை சேர்த்து பிடிக்க வேண்டும். எல்லா விரல்களையும் சேர்த்தே பிடிக்க வேண்டும். அப்பொழுது அற்புதமான பானிக்ரகண மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. மணமகன் மணமகளிடம் சொல்கின்ற உறுதிமொழி இது. அதில் முதல் மந்திரத்தின் பொருள் உனது கையை நான் பிடிக்கிறேன். நாம் இருவரும் நீண்ட இன்பத்தை சேர்ந்து வாழ்ந்து அனுபவிப்போம். தேவதைகள் இல்லறம் நடத்துவதற்காக உன்னை எனக்கு அளித்திருக்கிறார்கள். தேவர்களின் தலைவனான அக்னியும், முதல்வனான சூரியனும் என்னைக் அநுக்ரகிக்கட்டும். அழகுள்ளவளும், அன்னத்தைக் கொடுப்பவளு மாகிய சரஸ்வதியே எங்களை நீ காக்க வேண்டும். வாயு பகவானே இந்த மணமகளைக் காத்து இவளை என்னிடம் உறுதியான மனம் கொண்டவளாக செய்யட்டும் என்று நான்கு மந்திரங்கள் சிறப்பாக இந்த பாணிக்ரகணத்திலே
உள்ளன.

இது முடிந்தபிறகு, அடுத்த சடங்கு சப்தபதி என்னும் சடங்கு. பாணிக்ரகணம் செய்தபின் மணமகன் தன் வலது கையால் மணப்பெண்ணின் வலது கையை கட்டை விரலுடன் சேர்த்துப் பிடித்துக் கொண்டு மனைப் பலகையிலிருந்து எழுந்திருக்க வேண்டும். இருவரையும் அக்னிக்கு அருகே கிழக்காக ஏழு அடி நகர்த்தி வரச்செய்ய வேண்டும். அக்னிக்கு வலது புறமாக மணப்பெண்ணின் வலது காலை மணமகன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும். அப்பொழுது ஏழு மந்திரங்களை அடிக்கு ஒன்றாக சொல்லுவார்கள். இந்த மந்திரங்கள் அனைத்தும் அருமையான பிரார்த்தனை மந்திரங்கள். இதனை சப்தபதி மந்திரங்கள் என்பார்கள். இல்லறம் எப்படி நடத்த வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் மிக உயர்ந்த மந்திரங்கள் இந்த மந்திரங்கள். இந்த மந்திரங்களின் பொருளைத் தெரிந்து கொண்டால் நம் திருமண வைபவமானது எத்தனை அர்த்தம் பொதிந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இம்மந்திரங்கள் ஏதோ நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அலட்சியமாக நம்மை எண்ணாமல் இருக்க வைக்கும்.

சப்தபதி மந்திரங்களில்தான் திருமணத்தின் பூர்ணத்துவம் வெளிப்படுகிறது. அதனால்தான். இந்த சப்தபதி சடங்கிற்கு மிக முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் தந்திருக்கிறார்கள். இன்றைய நவீன காலத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுவதுதான் திருமணம் என்று கூறி மந்திரப் பூர்வமாக நிகழ்த்தும் வைதீகச் சடங்குகளிலே இதெல்லாம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஒன்றை தெரிந்து கொள்ளாமலேயே எதிர்ப்பது என்பது நமக்கு கைவந்த கலையாக இருக்கிறது. இருவர் இணைந்தால் திருமணம் அல்ல. இரு மனம் இணைந்தால்தான் திருமணம். இதைத் தான் சப்தபதி மந்திரத்திலே வைதீகம் ஆழமாக எடுத்துச் சொல்லுகின்றது. உரையாடல் போலேதான் இந்த மந்திரம் அமைந்திருக்கிறது. ஆனால், நமக்கு பொருள் புரியாததால் இதை கேலியாக தேவையில்லாத விஷயமாகக் கருதுகின்றோம். ஏற்கனவே, எடுத்துரைத்த ஏழு மந்திரங்களோடு சப்தபதி மந்திரம் முடிந்து விடவில்லை. மேலும் சில மந்திரங்கள் உண்டு. அது மணமகன் மணமகளை பார்த்து தரும் உறுதிமொழி.

இந்த மந்திரங்களை புரிந்து சொல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் மந்திரங்களைப் பொருளை யாவது சொல்லச்சொல்லி புரிந்து கொள்ளச் சொல்லலாம். மணமகளே! ஏழு அடிகள் வைத்த நீ இந்த வினாடி முதல் எனக்குத் தோழியாகி விட்டாய் சஹா சப்த பாதா. இந்த சப்த பதத்தால் நாம் இருவரும் ஒருவொருக்கொருவர் தோழர்களாகி விட்டோம்.இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இந்த இடத்திலே மணமகளே நீ எனக்கு அடிமை என்ற எஜமான பாவம் வரவில்லை. அடுத்து உன்னுடைய நட்பை நான் அடைந்தேன். உன்னுடைய நட்பிலிருந்து நான் நழுவ மாட்டேன். என்னுடைய நட்பை நீயும் விட்டுவிடாதே என்று இந்த மந்திரத்தின் தொடர்ச்சி கூறுகிறது.சஹாயௌ சப்தபதா பஹுவ ஸக்யந்தே சமேயம் சக்யத்தே என்று சக பாவனையோடு நாம் இணைந்து வாழ்வோம் என்று அக்னிக்கு முன்னாக பெரியோர்க்கு முன்னாக மணமகன் மணமகளிடம் உறுதிமொழி கூறுவதாக இந்த மந்திரம் அமைந்திருக்கிறது.

அடுத்து, நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம். செய்ய வேண்டியவைகளை கலந்து ஆலோசித்துச் செய் வோம் என்று வருகின்றது. கணவன் தன் விருப்பப்படி ஒரு காரியத்தைச் செய்வதாக இந்த மந்திரம் வரவில்லை. ராமாயணத்திலே இராமன் தவ ச்ரேஷ்டர்கள் தாங்கள் அரக்கர்களால் பல்வேறு வகையிலும் தாக்கப்பட்டு துன்பப்படுவதைக் காட்டுகின்றனர். அப்பொழுது அவர்களை காப்பாற்றுவதாக ராமன் உறுதிமொழி கொடுக்கின்றார். இதைப்பற்றி சீதையிடம் கலந்து ஆலோசிக்கின்றார். இதைத்தான் சப்தபதி மந்திரத்திலே செய்ய வேண்டியவைகளை நாம் கலந்து செய்வோம் என்று வருகின்றது.அதற்கடுத்த மந்திரம் நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்களாக இருப்போம். அன்பினால் பெருமையடைந்தவர்களாக இருப்போம். நல்ல உள்ளங்களாலே இருவரும் சேர்ந்து வாழ்வோம். உணவு, உடை, மற்ற சந்தோஷங்கள் எல்லாவற்றையும் சேர்ந்தே பகிர்ந்து கொண்டு அநுபவிப்போம். செய்ய வேண்டிய இல்லற தர்மங்களை இணைந்து செய்வோம்.

இதற்குப்பிறகு, இந்த மந்திரம் இன்னும் ஆழமாகப் போகின்றது. நீ ரிக் வேதமாக இருக்கிறார். நான் வேதமாக இருக்கிறேன். நான் ஆகாயமாக இருக்கின்றேன். நீ பூமியாக இருக்கின்றார். இரண்டும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்காக இது வருகின்றது. நான் வீரியமாகிய சுக்லத்தை தருபவனாக இருக்கின்றேன். நீ அதைத் தரிப்பவளாக இருக்கின்றார்.என்ன பொருள் என்று சொன்னால். இருவர் சம்மந்தம் சுக்ல சுரோநித சம்பந்தமாக மாறி நீரும் பயிறும் போலே இணையப்பெற்று நல்ல மக்களை இந்த சமூகத்திற்கு பெற்றுத் தருகின்றது. நான் மனதாக இருக்கின்றேன். அதனால் நான் நினைக்கின்றேன். நீ என் மனதில் உள்ளவற்றை பேசுபவளாக தெளிவு படுத்துபவளாக இருக்கின்றார். இந்த சப்தபதி ஆனபின்னால் மணமகனும் மணமகளும் ஒருவர் கையை ஒருவர் விடாமல் அக்னியை வலம் வரவேண்டும். வந்து பட்டுப் பாயில் அமர வேண்டும். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். தர்பத்தை ஆசனமாகக் கொண்டு அதன்மீது அமர்ந்துதான் மந்திரங்களை உச்சரிக்கின்றோம். வெறும் தரையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்த மந்திரங்கள் அதற்கான பலனைத் தருவதில்லை.

அக்னியை வலம் வரும் போது தெற்குப் புறத்தில் பிரம்மாவிற்கு இடம் உண்டு. எனவே, வலம் வரும்பொழுது பிரம்மாவைச் சுற்றாமல் பிரம்மாவிற்கும் அக்னிக்கும் நடுவில் வலம் வர வேண்டும்.இப்படி முடிந்த பின்னாலே செய்ய வேண்டிய அடுத்த காரியம் பிரதான ஹோமம். மனைவி வலது கையால் கணவனை தொட்டுக் கொண்டே இருக்க மணமகன் கீழே சொல்லப்படும் மந்திரங்களைச் சொல்லி பதினாறு ஹோமங்களைச் செய்ய வேண்டும்.

 

Tags : Thirumangalya Dharanam ,
× RELATED குரு – மங்கள யோகம்!