×

கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி: இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன; பயணிகளுக்கு பாதிப்பில்லை

நாகோன்: அசாமில் டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 7 யானைகள் பலியாகின. மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள சாய்ராங் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சாய்ராங் டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விரைவு ரயில் நேற்று அதிகாலை 2.17 மணியளவில் அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டம் சாங்ஜூரை கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து தண்டவாளத்தை கடந்து சென்ற 8 யானைகள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பெரிய யானைகள், 4 குட்டி யானைகள் உயிரிழந்தன. ஒரு குட்டி யானை காயத்துடன் மீட்கப்பட்டது. இதன் காரணமாக 5 ரயில் பெட்டிகளும், இன்ஜினும் தடம் புரண்டன. ஆனால் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதனால் டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் தற்காலிகமாக மற்ற பெட்டிகளில் காலியாக இருந்த பெர்த்களுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் தடம் புரண்ட பெட்டிகள் இல்லாமல் நேற்று காலை 6.11 மணிக்கு ரயில் கவுஹாத்திக்கு புறப்பட்டது.

அங்கு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, பயணிகள் மாற்றப்பட்டவுடன், டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் தன் பயணத்தை தொடங்கியது. இந்த விபத்து காரணமாக 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் மற்றும் நியூ டின்சுகியா-எஸ்எம்விடி பெங்களூரு எக்ஸ்பிரஸ் 13 ரயில்கள் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. 2 ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நாகோன் கோட்ட வன அதிகாரி சுஹாஷ் கடம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாங்ஜூரை கிராமத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம்.

காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பலியான 7 யானைகள் பிரேத பரிசோதனைக்கு பிறகு விபத்து நடந்த இடத்திற்கு அருகில் தகனம் செய்யப்படும்” என்றார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இதுபற்றி விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அசாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி கூறுகையில்,’ அசாம் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், வனப்படைத் தலைவர், தலைமை வனவிலங்கு வார்டன் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Assam ,Nagaon ,Sairang ,Mizoram ,Aizawl ,Delhi ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...