புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பதிலாக, விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத மிஷன்( விபி.ஜி.ராம்.ஜி) என்ற புதிய மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் ஒன்றிய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மன்ரேகா சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு பயனளித்த ஒரு புரட்சிகரமான திட்ட நடவடிக்கையாகும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, சுரண்டப்பட்ட, ஏழை மற்றும் மிகவும் ஏழைகளுக்கு வாழ்வாதார ஆதாரமாக இந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது உருவெடுத்தது. குறிப்பாக ஒருவரின் தாய்நாடு, கிராமம், வீடு மற்றும் குடும்பத்திலிருந்து வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்வது நிறுத்தப்பட்டது. வேலை வாய்ப்புக்கான சட்ட உரிமைகள் இதன் மூலம் வழங்கப்பட்டன. கிராம பஞ்சாயத்துகள் அதிகாரம் பெற்றன.
மன்ரேகா மூலம், மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியக் கனவை நோக்கி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டம் என்பது ஏழை எளியோர்களின் உயிர்நாடியாக இருந்து வந்தது. கடந்த 11 ஆண்டுகளில், கிராமப்புறங்களில் வேலையில்லாதவர்கள், ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களின் நலன்களைப் புறக்கணித்து, மன்ரேகா திட்டத்தை பலவீனப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக கோவிட் காலத்தில் ஏழைகளுக்கு ஒரு உயிர்நாடியாக நிரூபிக்கப்பட்ட இந்த திட்டத்தை முற்றிலுமாக மோடி அரசு அழித்துவிட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட வேண்டும்.. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
