×

சென்னை அருகே கோவளத்தில் ரூ.350 கோடியில் 6வது நீர்த்தேக்கம்: 29ம்தேதி முதல்வர் அடிக்கல்

திருப்போரூர்: சென்னை அருகே கோவளத்தில் ரூ.350 கோடி செலவில் 6வது நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு வரும் 29ம்தேதி முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளுக்கு இடையே கோவளம் உபவடிநிலப் பகுதியில் புதிய குடிநீர் நீர்த்தேக்கம் உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3010 ஏக்கர் உப்பளப் பகுதி மற்றும் அரசு நிலம் 1365 ஏக்கர் உட்பட மொத்தம் 4375 ஏக்கர் அரசு நிலங்களில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர், மானாமதி, சிறுதாவூர், காலவாக்கம், ஆமூர், பையனூர் உள்ளிட்ட 69 ஏரிகளின் உபரிநீர், உப்பளம் மற்றும் அரசுக்கு சொந்தமான காலி நிலம் வழியாக பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட்டு, இறுதியாக முட்டுக்காடு, கொக்கிலமேடு முகத்துவாரங்களில் கடலில் கலக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலை பரவலாக்கவும், தமிழ்நாடு அரசு, 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்புகளின் போது, செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக 4375 ஏக்கர் பரப்பளவில் 1.655 டி.எம்.சி கொள்ளளவுடன் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் அளவுக்கு 9 மாதங்கள் குடிநீர் வழங்க ஏதுவாக, ரூ.350 கோடி மதிப்பில், விரிவான திட்ட அறிக்கை நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்புதலுக்காக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணி, கொக்கிலமேடு முகத்துவாரத்திற்கு வெள்ள நீர் செல்வதற்கு ஏதுவாக நீர்தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழுங்கி அமைத்தல், நீர் உள்வாங்குவதற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழுங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரீனை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கொக்கிலமேடு கழிமுகங்களுக்கு வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் இந்த திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. புதிய நீர்த்தேக்க பணிகளை மேற்கொள்வதற்கான நிர்வாக அனுமதியை பெறுதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கும் பணிகளும் இத்திட்டத்திற்கான நீர்வளத்துறைக்கு நிலம் மாற்றம் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் வரும் 29ம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முதல்வரால் தொடங்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : 6TH RESERVOIR ,RS ,KOWALI NEAR CHENNAI ,KOWALA NEAR CHENNAI ,STONE ,East Coast Road ,Thiruporur ,Thirukkadukunram ,Chengalpattu district ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...