×

நான்காவது டி20 போட்டியில் இன்று மீண்டும் வேட்டையாடுமா இந்தியா? தொடரை கைப்பற்ற தீவிரம்

லக்னோ: இந்தியா-தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி, லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 3 போட்டிகளில் இந்தியா 2ல் வென்று 2-1 என்ற கணகி்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் அட்டகாசமாக பந்து வீசி தென் ஆப்ரிக்கா வீரர்களை திணறடித்தனர்.

அதனால், 117 ரன்னில் அந்த அணி சுருண்டதால், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், 4வது டி20 போட்டி, இன்று லக்னோ நகரில் நடைபெற உள்ளது. தென் ஆப்ரிக்காவுடன் இதுவரை நடந்த போட்டிகளில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், வழக்கமான சரவெடி ஆட்டத்தை செயல்படுத்தாமல், சொதப்பி வருவது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டில், சூர்ய குமார் யாதவ், இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இன்றைய போட்டியிலாவது அவர் தனது ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், துணை கேப்டன் சுப்மன் கில்லும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். துவக்க வீரராக ஆடி வரும் அவர், அந்த இடத்துக்கு உரிய வேகத்தை இழந்து தவித்து வருகிறார். சிறப்பாக ஆடக்கூடிய சஞ்சு சாம்சன் இடத்தை பிடித்து ஆடிவரும் கில், இன்று சிறப்பாக ஆடி, தனது நிலையை நியாயப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டியில் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், உடல்நலக் குறைவால் ஆடவில்லை. அவருக்கு பதில், ஷாபாஷ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். முந்தைய போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆடாத நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இன்று ஆடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

தென் ஆப்ரிக்கா அணியை பொறுத்தவரை, அவர்களின் ஆட்டம், சீராக இல்லாமல், அவ்வப்போது தொய்வடைவது வழக்கமாகி வருகிறது. முந்தைய போட்டிகளில் அதகளப்படுத்திய அவர்கள், 3வது டி20யில் மோசமாக ஆடி தோல்வியை தழுவினர் .கடந்த ஜூன் மாதத்துக்கு பின் நடந்த 28 போட்டிகளில், தென் ஆப்ரிக்கா அணி, 18ல் தோல்வி அடைந்துள்ளது. அதனால், அவ்வப்போது தேவையான மாற்றங்களை தென் ஆப்ரிக்கா அணி நிர்வாகம் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதேசமயம், தொடரை சமன்படுத்த தென் ஆப்ரிக்கா அணி, கூடியவரை போராடும். அதனால், இன்றைய போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது.

Tags : India ,fourth T20 ,Lucknow ,4th T20 ,South Africa ,T20 ,
× RELATED 4வது டி20 கிரிக்கெட்: இந்தியா-தெ.ஆப்ரிக்கா மோதல்