சின்னசேலம், டிச. 17: கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தபோதிலும் கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே சேமிப்பது வழக்கம். இந்த அணையின் மூலம் 10860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதாவது முதன்மை கால்வாய் பாசன கால்வாய் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும், பழைய கால்வாய் பாசனம் மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் கோமுகி அணை நிரம்பிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 25ந்தேதி சம்பா பருவ சாகுபடிக்கு கோமுகி அணை நீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம் புதிய பாசன கால்வாய்மூலம் 7 கிராமங்கள், பழைய பாசன கோமுகி ஆறுமூலம் 33 கிராமங்கள் என 40 கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள்.இந்நிலையில் கோமுகி அணை பாசனத்திற்கு திறந்து சுமார் 50 நாட்கள் ஆனநிலையில் தற்போது அணையில் 42.20 அடி நீர்மட்டம் உள்ளது. அதைப்போல கல்வராயன்மலைப் பகுதியில் போதிய மழை இல்லாததால் அணைக்கு மிக குறைந்த அளவான வினாடிக்கு 160 கனஅடி நீர்வரத்து உள்ளது. இருப்பினும் பாசன விவசாயிகளின் நலன்கருதி கோமுகி ஆற்றில் வினாடிக்கு 120 கனஅடியும், முதன்மை பாசன கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கல்வராயன்மலையில் பெய்யும் மழை மற்றும் அங்கிருந்து வரும் நீர்வரத்திற்கேற்ப பிப்ரவரி மாதம் முழுவதும் தண்ணீர் பாசனத்திற்கு வழங்கப்பட உள்ளது. மேலும் தற்போது கோமுகி ஆற்றிலும், பாசன கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வடக்கநந்தல் பெரியேரி, கல்லேரி, கச்சிராயபாளையம் ஏரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகள் ஓரிரு நாளில் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
