புதுச்சேரி, டிச. 17: விழுப்புரம் அதிமுகவில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பிக்கு ஜெ.பேரவை மாவட்ட துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சை புகாரில் சிக்கியவருக்கு பதவி வழங்கியிருப்பது கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி சங்கர் சமீபத்தில் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் முன்னிலையில் இணைந்தார். தொடர்ந்து அதிமுக சார்பில் நடைபெற்று வந்த நிகழ்ச்சிகள், போராட்டம் உள்ளிட்டவைகளில் பங்கேற்ற நிலையில் அவருக்கு தற்போது ஜெ. பேரவை மாவட்ட துணை செயலாளர் பதவி வழங்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதியில் அவருக்கு தற்போது பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் தேர்தல் வேலைகளை கவனிக்கும் வகையில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றன.இதனிடையே அதிமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி சங்கர் மீது பணியில் இருந்தபோது பெண் விவகாரத்தில் சர்ச்சை புகாரில் சிக்கியிருந்ததாக கூறப்பட்டது. ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி சங்கரிடம் அவரது குடும்பத்தினர் பேசும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த சர்ச்சை புகாரில் சிக்கிய ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி சங்கருக்கு தற்போது அதிமுகவில் பதவி வழங்கியுள்ளது தேர்தல் நேரத்தில் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
