×

வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சம்: மக்கள் கடும் அதிர்ச்சி; வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி ரூ. 1,001,20 என வரலாற்று உச்சத்தை தொட்டது. இதனால், பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை அடுத்தடுத்து வருவதால் இன்னும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் தங்கத்தை விரும்பாதவர்கள் என்று சொல்ல யாரும் இருக்க முடியாது. இந்திய மக்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு நகையின் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதுவும் வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்து விட்டால் அவ்வளவு தான். நிலைமை தலைகீழாக மாறிவிடும். சிறு வயதில் இருந்தே அவர்கள் திருமணத்திற்காக சிறு, சிறுக நகை வாங்க தொடங்கி விடுவார்கள். மேலும் தங்களது மகள் வெளியில் மற்றும் விஷேசங்களுக்கு செல்லும் போது தங்க நகை அணிவதை பெருமையாகவும், கவுரமாகவும் கருதி வருகிறார்கள். இதனால் தான் விழாக்காலங்களில் பெரும்பாலான நகைக்கடைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதைப் பார்க்க முடியும்.

அதுவும் அட்சய திரிதியை அன்று குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் நகைக்கடையே நோக்கி செல்வதை பார்க்க முடியும். ஆபரணங்களாக மட்டுமல்லாமல் தங்க பிஸ்கட் மற்றும் தங்கக் காசுகளையும் வாங்கி தங்கத்தில் முதலீடு செய்வதை காலம் காலமாகவே பின்பற்றி வருகிறார்கள். அதனால், எப்போதும் தங்கத்தின் மவுசு என்பது அதிகரித்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் அதன் விலை என்பதும் அதிகரித்து கொண்டே வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் இந்த ஆண்டில் தங்கம் விலை என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. அதுவும் வழக்கமாக காலையில் மட்டும் தான் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் என்பது இருக்கும். ஆனால், இந்த மாதங்களில் காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 தடவை உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் படைத்தது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் கண்டு வரலாற்று உச்சத்தை தொட்டு வந்தது. தொடர்ந்து கடந்த மாதத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை இருந்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் அப்படியே இருந்து வந்தது. மேலும் வெள்ளி விலையோ, ஜெட் வேகத்தில் பறந்தது.

தொடர்ந்து 11ம் தேதி வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2000 அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.207க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது. அது அன்றைய தினம் முறியடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கிடு, கிடுவென உயர்வை சந்தித்தது. அதாவது அன்றைய தினம் தங்கம் விலை காலையில் பவுனுக்கு ரூ.1,600, மாலையில் பவுனுக்கு ரூ.960 என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,530 உயர்ந்து ஒரு பவுன் ரூ.98,960க்கு விற்பனையானது.

இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகப்பட்ச விலையாகும். தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே நேரத்தில் அன்றைய தினம் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரை காலை, மாலை என கிலோவுக்கு ரூ.7 ஆயிரம், உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனையானது. இதுவும் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சம் கண்டது. தொடர்ந்து 13ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் வெள்ளி விலை மட்டும் கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.10 லட்சத்துக்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வார தொடக்க நாளிலேயே தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வை தான் சந்தித்தது. அதாவது நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,680க்கும் விற்பனையானது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் நேற்று காலை அதிரடியாக உயர்ந்தது.

வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.213க்கும், கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை பவுன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடுமோ? என்ற கவலை நகை வாங்குவோரிடையே இருந்து வந்தது. அந்த கவலை நேற்று பிற்பகலில் நிருபணமானது. நகை வாங்குபவர்கள் கவலைப்பட்டதை போலவே தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதாவது, நேற்று பிற்பகலில் 2வது முறையாக தங்கம் விலை உயர்ந்த போது இந்த புதிய உச்சத்தை தொட்டது. நேற்று பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,515க்கும், பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,00,120க்கும் விற்பனையானது.

இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று பிற்பகலில் வெள்ளி விலையும் உயர்ந்தது. நேற்று பிற்பகல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2.15 லட்சத்துக்கும் விற்பனையானது. வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை என வரிசையாக பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை மேலும் கலக்கமடைய செய்துள்ளது. அதே நேரத்தில் பண்டிகை நாட்களில் மேலும் விலை உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘தங்கத்தின் விலை தினமும் கூடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக உயரக்கூடும். ஒருநாள் கூடினால் மற்றொரு நாள் குறைகிறது. ஆனால் விலை உயர்வுக்கு ஏற்ற அளவு குறையாது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் தற்போது போர் பதட்டம் இல்லாத சூழலிலும் தங்கம் விலை உயருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

சர்வதேச அளவில் பொருளாதார போட்டி அதிகரித்து வருவதால் மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், லாபகரமாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் தங்கம், பண்டம் மாற்று பொருளாக மாறவும் வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை கூடினாலும் வியாபாரம் பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என்றனர்.

* சர்வதேச நாடுகளில் நிலவும் பதற்ற நிலையே காரணம்: ஒன்றிய நிதியமைச்சர் விளக்கம்
தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சம் தொட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்ததற்க சர்வதேச அளவில் நிலவும் பதற்ற நிலையும் பொருளாதார வளர்ச்சி குறித்த ஸ்திரத்தன்மையற்ற நிலையும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலை காரணமாக பாதுகாப்பு கருதி மத்திய வங்கிகளும், உலக அளவிலான பல்வேறு அமைப்புகளும் தங்கத்தில் அபரிமிதமாக முதலீடு செய்வதால் தேவை அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி, சர்வதேச சந்தையில் தங்கம் வாங்கும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும், வரிகளும், பரிமாற்ற கட்டணங்களும் தங்கம், வெள்ளி விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடப்பு ஆண்டில் தேவைக்காக மட்டுமின்றி முதலீட்டுக்காகவும் தங்கம் வாங்குவது தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை சந்தையால்தான் முடிவு செய்யப்படுகிறது. இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை. அதேநேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியும் ஒன்றிய அரசும் தங்கம், வெள்ளி இறக்குமதியை முறைப்படுத்தியுள்ளன. இதன் மூலம் தங்கம் கடத்தல் குறைவதோடு, விலையை கண்காணிக்க உதவுகிறது. இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறினார்.

* நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.2,38,590 கோடி தங்கம் இறக்குமதி
நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.2,38,590 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.28,890 கோடி மதிப்புக்கு வெள்ளியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.4,98,800 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.41,452 கோடி மதிப்பிலான வெள்ளியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல், கடந்த நிதியாண்டு முடிவில், அதாவது, கடந்த மார்ச் 31ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் 879.58 டன் தங்கம் இருப்பு இருந்தது. இதுபோல், 2023-24 நிதியாண்டு முடிவில், அதாவது கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிப்படி 57.48 மெட்ரிக் டன் தங்கம் இருப்பு இருந்தது. இதன்படி, ஓராண்டில் ரிசர்வ் வங்கியிடம் தங்கம் இருப்பு 57.48 மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது என, ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

ஓராண்டில்…
தங்கம் விலை ஓராண்டில் உயர்ந்து வந்த விவரம்:
ஜன. 1ம் தேதி ரூ.57200
பிப்ரவரி ரூ.61960
மார்ச் ரூ.63520
ஏப்ரல் ரூ.68160
மே ரூ.70200
ஜூன் ரூ.71600
ஜூலை ரூ.72160
ஆகஸ்ட் ரூ.73200
செப்டம்பர் ரூ.77640
அக்டோபர் ரூ.87120
நவம்பர் ரூ.90480
டிசம்பர்(நேற்று) ரூ.100120

கடந்த 5 ஆண்டில்…
2021 ரூ.37,272
2022 ரூ.41,040
2023 ரூ.47,800
2024 ரூ.59,640
2025 ரூ.1,001,20

Tags : Chennai ,
× RELATED சென்னை விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடி...