துறையூர், மே 1: துறையூர் அருகே சிக்கத்தம்பூரில் 2 மாதமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் திடீர் சலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூரை அடுத்து உள்ளது சிக்கதம்பூர் கிராமம் . இந்த கிராமத்தில் அய்யர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து கடந்த 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், இந்த குடிநீர் பிரச்னைக்காக சில மாதங்களுக்கு முன்பு இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 20 இடங்களுக்கு மேல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் குடிநீர் இருந்தும் மின் மோட்டார் அமைத்து குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருந்தும் அதை பயன்படுத்த தங்களால் இயலவில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.