துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் அருகே வக்கீல் வீட்டை உடைத்து 45 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் விஜிபி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் அசோக் (50), வக்கீல். இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 45 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரிந்தது.இதுகுறித்து நீலாங்கரை போலீசில் அசோக் புகார் செய்தார். அதன்பேரில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.