சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை ஈஷா யோக மையத்தில் 31வது மகா சிவராத்திரி விழா வரும் பிப்.26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 2025ம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை கடந்த டிச.11ம் தேதி தருமபுரம் ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை கடந்த 22ம் தேதி பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். இந்த ரதங்கள் மகா சிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு ஆதியோகி ரதம் நேற்றைய தினம் வந்தடைந்தது. சென்னையில் வரும் 30ம் தேதி தொடங்கி ஜனவரி 10ம் தேதி வரையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ரதம் பயணிக்க உள்ளது. ஆதியோகி ரதங்கள் திட்டமிட்டபடி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்.26ம் தேதி மகா சிவராத்திரி அன்று கோவை ஈஷா யோகா மையத்தை வந்தடையும். அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தென் கைலாய பக்தி பேரவை தன்னார்வலர்கள் சீனிவாசன், இந்து உடனிருந்தனர்.
The post மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை வரும் 30ம் தேதி முதல் சென்னையில் வலம்: தென் கைலாய பக்தி பேரவை தகவல் appeared first on Dinakaran.