‘லைவ் ஷோ’வில் அசர வைக்கிறார்கள்... அழிவின் பிடியில் சிக்கி நிற்கும் சர்க்கஸ் கலை: வேதனையோடு விவரிக்கும் சாதனையாளர்கள்

சேலம்: மனித குலத்தை வியப்பில் ஆழ்த்தும் விஷயங்கள் இரண்டு. அதில் ஒன்று சாதனை. மற்றொன்று சாகசம் என்றால் அது மிகையல்ல. கால் பதித்த துறைகளில் சாதனை படைப்போரை நாயகர்களாக எப்போதும் மக்கள் மனதில் வைத்திருப்பார்கள். அவர்கள் பதித்த சுவடுகளும் அச்சாதனையை காலமெல்லாம் தாங்கி நிற்கும். சாகசம் என்பது நிகழ்த்தப்படும் தினத்தில் மனங்களில் பதிந்து சிம்மாசனம் ேபாட்டு அமர்ந்து கொள்ளும். ஆனால் நாட்கள் கடந்தோட, சாகசங்கள் மறைந்தோடும். அப்படிப்பட்ட சாகசங்களை தினமும் நம் கண் முன்னே லைவ் ஷோவாக நிகழ்த்திக்காட்டும் பாரம்பரிய கலைகளில் ஒன்று தான் சர்க்கஸ்.

கால்நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நாடு முழுவதும் நூறுக்கும் அதிகமான சர்க்கஸ் கம்பெனிகள் இயங்கிக்கொண்டிருந்தன. சிங்கம், புலி, கரடி, யானை, குதிரை, ஒட்டகம், பேசும் கிளி, நாய் உள்ளிட்ட விலங்கினங்களை கொண்டு அசாத்திய சாகசங்களை செய்து, மக்களை அசர வைத்தார்கள் சர்க்கஸ் கலைஞர்கள். அன்றைய காலகட்டத்தில் முக்கிய கோயில் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் ஊருக்கு ஊரு சர்க்கஸ் நிகழ்ச்சிகள் களைகட்டும். ஆனால், தற்போது இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிகள் அரிதாகிவிட்டது. சர்க்கசில் விலங்குகளை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு நடைமுறைக்கு வந்ததும், அதன்மீதான எதிர்பார்ப்பு குறைந்ததே இதற்கு காரணம். பல கம்பெனிகளில் இருந்த விலங்குகளை அரசு, தன்வசப்படுத்தியதும் அக்கம்பெனிகள் கலைக்கப்பட்டன.

இன்றைய நிலையில் நாடு முழுவதும் சுமார் 25 சர்க்கஸ் கம்பெனிகள் மட்டுமே உள்ளன. இந்த கம்பெனிகளில் இருக்கும் கலைஞர்கள், தங்களின் வித்தியாசமான சாகசங்களால்  திறமைகளை வெளிப்படுத்தி, இன்றளவும் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டு சாகசங்கள் புரியும் கலைஞர்கள், காலத்தின் கோலத்தால் வெகுவாக குறைந்துவிட்டனர். அதேநேரத்தில் நலிந்து வரும் இக்கலையை நேசித்து மெருகூட்ட புதியவர்கள் யாரும் முன்வருவதில்ைல. இதனால் அழிவின் பிடியில் இந்த அபாரக்கலை சிக்கி நிற்கிறது.

இந்த நிலையை மாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுமட்டுமே அடுத்தடுத்த தலைமுறைக்கு சர்க்கஸ் என்றும் அரிய கலையை கொண்டு சேர்க்கும் என்பது மூத்த கலைஞர்களின் எண்ண ஓட்டமாக உள்ளது. இது குறித்து சேலத்தில் முகாமிட்டிருக்கும் அப்போலோ சர்க்கஸ் மூத்த கலைஞர்கள் கூறுகையில், ‘‘சர்க்கஸ் கலையின் இன்றைய நிலையை எண்ணினால் மிகவும் வேதனையாக உள்ளது. ஆனாலும், எங்களது சாகசங்களை பார்க்க உற்சாகமாக மக்கள் வரும் போது எல்லையில்லா ஆனந்தம் உள்ளுக்குள் வருகிறது’’என்று நெகிழ்ந்து நிற்கின்றனர். அந்தரத்தில் ரஷ்யன் ஏரியல் ஆக்ட் சாகசம் செய்திடும் நேபாள நாட்டை சேர்ந்த சோனு கூறுகையில், ‘‘எனது 3வது வயதில் சர்க்கஸ் கம்பெனிக்கு வந்தேன்.

இப்ேபாது 33 வயதாகிறது. 30ஆ ண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறேன். தற்போது எனது மனைவி ஜோதியுடன் சேர்ந்து அந்தரத்தில் துணியால் ரஷ்யன் ஏரியல் ஆக்ட் சாகசத்தை செய்து வருகிறேன். எனது குழந்தைகள், நேபாளத்தில் படிக்கின்றனர். இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு இந்த சாகசத்தை செய்திட இயலும் என்ற நம்பிக்கையில் எனது வாழ்க்கை பயணம் தொடர்கிறது,’’ என்றார். மணிப்பூரின் 2 குடும்பங்களை சேர்ந்த 12 பேர், அக்ரோ பெட், ஜிம்னாஸ்டிக், சேர் அக்ரோபெட், பயோ டான்ஸ், நைப் (கத்தி) பேலன்ஸ் போன்ற சாகசங்களை செய்து அசத்துகின்றனர். அவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், பல சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றியவர்கள்.

தற்போது நாங்கள் அப்போலா கம்பெனியில் சாகசங்களை நிகழ்த்தி, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறோம். நித்தமும் புதிய வித்தைகளை களத்தில் காட்டிட தீவிர பயிற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனாலும் அடுத்த தலைமுறைக்கு சாகசங்கள் சென்று சேருமா? என்றால் சந்தேகமே மிஞ்சுகிறது,’’ என்றனர். யாரும் செய்திடாத சாகசங்களை செய்திடும் சர்க்கஸ் கலையை மீட்டெடுக்க பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் செய்திட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த சர்க்கஸ் கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

கேரளாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம், இடவசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கின்றனர். அது ேபான்ற சலுகைகளையும், வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, மீன்களை  சர்க்கசில் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அரசு முழுமையாக வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இந்த கலை, தலைமுறைகள் கடந்தும் தொடரும் என்பது அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

500 பேர் இருந்த இடத்தில் 150பேர்

25ஆண்டுக்கு முன்பிருந்த சர்க்கஸ் கம்பெனிகளில் பல்வேறு சாகசங்களை செய்திடும் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருந்தனர். ஆனால் தற்போதுள்ள சர்க்கஸ் கம்பெனிகளில் 150பேர் மட்டுமே இருக்கின்றனர். பல விளையாட்டுகளை ஆட ஆட்கள் இல்லை. குறிப்பாக அந்தரத்தில் பார் சாகசம் என்பது அறவே குறைந்துள்ளது.

துவள வைத்த கொரோனா

அப்பலோ சர்க்கஸ் கம்பெனியின் நிர்வாகி பாபு கூறுகையில், ‘‘கொரோனா தொற்று பரவிய காலத்தில் கர்நாடகாவில் சிக்கினோம். 2 ஆண்டுகள் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் கலைஞர்கள் தவித்துப் போனார்கள். மீண்டும் அவர்களை தொழிலுக்கு கொண்டுவந்து, சாகசங்களை செய்ய வைப்பது பெரும்பாடாகி விட்டது. தற்போது, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் சேலம்,நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் சர்க்கஸ் போடுகிறோம். சேலத்தில் நடக்கும் சர்க்கஸ் வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. மக்களுக்கு லைவ் ஷோ என்றால் மிகவும் பிடிக்கும். அதனை செய்து காட்டுவதால், தொடர்ந்து ஆதரவளிக்கின்றனர்’ என்றார்.

கலர் நீரை பிரித்து வியப்பூட்டும் கலைஞர்

இரு நிறங்களில் நீரை ஒன்றாக குடித்துவிட்டு, பிறகு அதனை தனித்தனியே பிரித்தெடுக்கும் சாகசத்தை ஒடிசாவை சேர்ந்த சாகர் (38) என்ற கலைஞர் செய்கிறார். அவர் கூறுகையில், ‘‘18 வருடங்களாக இந்த சாகசத்தை செய்துவருகிறேன். முன்பெல்லாம் தண்ணீரோடு மீனை விழுங்கி, அதனை உயிரோடு வெளியே எடுப்பேன். தற்போது, மீனை வைத்து சர்க்கஸ் செய்திட கூடாது என்று உத்தரவு போட்டுள்ளனர். இதனால் கலர் நீரை பிரித்து எடுக்கிறேன். யோகா மற்றும் ஒருவேளை உணவு மூலம் இச்சாதனையை செய்ய முடிகிறது,’’ என்றார்.

இவர் உலகின் டாப் மரணகூண்டு ரெய்டர்

அப்பலோ சர்க்கசில் மரணக்கூண்டில் பைக் ஓட்டும் சாகச கலைஞரான கேரளாவை சேர்ந்த வல்சன், உலகின் டாப் ரெய்டர். இவர், அமெரிக்கா, கென்யா, மொரிசியஸ், ஐஸ்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  மரணக்கூண்டு, மரண கிணற்றில் பைக் ஓட்டி சாதனை படைத்துள்ளார். 63 வயதான வல்சன் கூறுகையில், ‘‘எனது தந்தை சாதுசிங்கும், தாய் அம்முஜாவும் சர்க்கஸ் கலைஞர்கள்.

அவர்களுடன் இருந்து பைக் ரெய்டரானேன். ஜெர்மனியில் நடந்த உலக சர்க்கஸ் போட்டியில் பங்கேற்று சாகசம் செய்திருக்கிறேன். இந்த மரணக்கூண்டு பைக் ரெய்டு செய்திட தற்போது நாடு முழுவதும் 10 பேர் தான் இருக்கின்றனர். மிகவும் ஆபத்தான இந்த சாகசத்தை அடுத்த தலைமுறையில் நிச்சயம் பார்க்க முடியாது. எனது மகன், வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார். அதேபோல்தான், மற்ற கலைஞர்களின் வாரிசுகளும், புதியவர்களும் சர்க்கஸ் தொழிலுக்கு வருவதில்லை,’’ என்றார்.

Related Stories: