இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல்,காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற நடவடிக்கை: சட்டப்பேரவையில் கே.என்.நேரு பேச்சு

மதுரை மாநகராட்சி முழுவதும் பயன்பெறும் வகையில் முல்லைப்பெரியாரை நீராதாரமாகக் கொண்டு ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டம் ஏறக்குறைய 60 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. கோயம்புத்தூர்  மாநகராட்சியில் 24 x 7 குடிநீர் திட்டம், பில்லூர்-3 குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக பேரவையில் அமைச்சர் கூறியதாவது:

இந்த அவையில் மூன்றாம் ஆண்டாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் மீது எனது பதிலுரையினை தொடங்குகிறேன். தமிழ்நாட்டின் நகர்ப்புர உள்ளாட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்றியமையாத அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நகர்ப்புர வாழ்வாதார திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி வறுமையை அகற்றுதல், அடிப்படை பொதுசுகாதாரம் மற்றும் அடிப்படை கல்வி வசதியினை உறுதிப்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை தீட்டி, மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதே நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தலையாய குறிக்கோளாகும்.

தமிழ்நாட்டில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை குடிநீர் வாரியம், டுபிட்கோ, டுபிசில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம், டுவிக் ஆகியன செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில், 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் தரத்திற்கு ஏற்றவாறு பணியாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னர்களின் தலைநகரங்களாக இருந்த இராமநாதபுரம், புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் வர்த்தக நகரமான நாமக்கல், கல்வி நகராமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கைகள் வந்த வண்ணமுள்ளன. அதேபோல் ஶ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், பெருந்துறை, அவிநாசி, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு போன்ற சில பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமெனவும், சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமெனவும், கோரிக்கைகள் வந்து கொண்டுள்ளன.

நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும்  தரம் உயர்த்துவது குறித்து ஆய்ந்து   விரைவில் முடிவு எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் டிசம்பர் 2024-ல் முடிவடைவதால், அதற்கு பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்புர உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பதை, ஊரக வளர்சித் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து முதலமைச்சரின் உத்தரவு பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த அவையில் தெரிவித்து கொள்கிறேன்.

சென்னை மாநகரில் முந்தைய அரசால் நாளொன்றுக்கு விநியோகிக்கப்பட்ட 830 மில்லியன் லிட்டர் குடிநீரின் அளவு இந்த அரசால் 1030 மில்லியன் லிட்டராக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கழக அரசு பொறுப்பேற்கும் முன், 18 பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. அவற்றில் 9 பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகளை விரைவுபடுத்தி, ரூ.190 கோடி மதிப்பீட்டிலான பணிகள், 1.45 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் 12.05.2022  அன்று  திறந்து வைக்கப்பட்டது. எஞ்சிய பணிகளும் விரைவில் முடிக்கப்பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு   கொண்டு வரப்படும்.

சென்னைக்கு அருகிலுள்ள நெம்மேலியில் நடைபெற்று கொண்டிருக்கும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலை 2023-ல் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், நெம்மேலிக்கு அருகிலுள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மற்றொரு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. முந்தைய அரசு கவனத்தில் கொள்ளாத குடிநீர் விநியோகத்தின்போது ஏற்படும் பெருமளவு இழப்புகளை கண்டறிவதற்கு இந்த அரசால் அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் குடிநீர் பகிர்மான நிலையங்களில், ரூ.50 கோடி மதிப்பீட்டில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் ஆலந்தூர், ஆயிரம் விளக்கு தொகுதி மற்றும் கே.கே நகரிலுள்ள அண்ணா பிரதான சாலை போன்ற பகுதிகளில் கழிவுநீர் கட்டமைப்புகளிலுள்ள குறைபாடுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிரந்தர  தீர்வு காணும் வகையில் ஆலந்தூர் பகுதியில் ரூ.127 கோடி மதிப்பீட்டிலும், ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.53 கோடி மதிப்பீட்டிலும், கே.கே நகரில் ரூ.46 கோடி மதிப்பீட்டிலும், குறைபாடுகள் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் 17 பகுதிகளில் கழிவுநீர் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டில் உள்ளது. 9 பகுதிகளில் ரூ.783 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 16 பகுதிகளுக்கும் மற்றும் மாதவரத்தில் விடுபட்ட பகுதிகளுக்கும் முந்தைய அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது அவற்றிற்கு ரூ.2288 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

1971-ல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாட்டிலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புர பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட குடிநீர் திட்டங்களையும் மற்றும் நகர பகுதிகளில் கழிவுநீர் அகற்ற பாதாள சாக்கடைத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாரியத்தின் பராமரிப்பில் உள்ள 544 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் 12 மாநகராட்சிகள், 65 நகராட்சிகள், 346 பேரூராட்சிகள் மற்றும் 52,361 ஊரகக் குடியிருப்புகளிலுள்ள சுமார் 4.53 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் சராசரியாக நாளொன்றுக்கு 2,104 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

2021-க்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, நீண்டகாலமாக முடிவுறாமலிருந்த நாமக்கல் குடிநீர் அபிவிருத்தி திட்டம், வேலூர் மாநகராட்சி குடிநீர் திட்டம், ஆலம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், இரணியல் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற திட்டங்கள் இந்த ஆட்சி அமைந்த பின்னர் துரித நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக தற்பொழுது அவை அனைத்தும் முடிக்கப்பட்டு,  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் வேலூர், கிருஷ்ணகிரி, கடலூர், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ரூ.2,432 கோடி திட்ட மதிப்பீட்டில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 31  பேரூராட்சிகள் மற்றும்  3,783 ஊரக குடியிருப்புகளில் உள்ள 39 இலட்சத்து 3 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் 26 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.738 கோடி மதிப்பீட்டில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் உள்ள 7 இலட்சத்து 46 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் 10 பாதாளசாக்கடை திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் பில்லூர் கூட்டுக்குடிநீர் (மூன்றாம் கட்டம்) மற்றும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மே மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன. அதேபோல், சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர் திட்டம் தற்போது சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளது.

JJM மற்றும் அம்ரூத் 2.0 திட்ட நிதிஆதாரங்களுடன், 18  மாவட்டங்களைச் சார்ந்த 6 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள்  மற்றும் 11,847  ஊரகக் குடியிருப்புகளிலுள்ள 74 இலட்சத்து 84 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.14,652 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள 36 கூட்டுக்குடிநீர் திட்டங்களில் 22 திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. எஞ்சிய 14 திட்டங்களும் விரைவில் துவங்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் தினசரி சுமார் 667 மில்லியன் லிட்டர் குடிநீர் 21 இலட்சத்து 59 ஆயிரம் வீட்டு இணைப்புகள் மூலம் வழங்கப்படும்.

இவை தவிர 7 மாநகராட்சிகள், 21 நகராட்சிகள், 28 பேரூராட்சிகள் மற்றும் 8,588 ஊரக குடியிருப்புகளில் உள்ள சுமார் ஒரு கோடியே 33 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.10,955 கோடி மதிப்பீட்டில் 32 குடிநீர் திட்டங்களும், 11 பாதாளச் சாக்கடைத் திட்டங்களும், பராமரிப்பிலுள்ள 56 கூட்டுக்குடிநீர் திட்டங்களை ரூ.1,722 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்து குடிநீர் வழங்கும் திட்டங்களும் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 3 பகுதிகள், தூத்துக்குடி மாநகராட்சியின் விடுபட்ட மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் ஓசூர் மாநகராட்சி  ஆகிய நகர்ப்புரங்களில் உள்ள 3.32 இலட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.1,006 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டங்கள்  அம்ரூத் 2.0 நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்பட உள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் நமது தலைவர் தளபதி அவர்களால் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிலுள்ள கனவுத் திட்டமான ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் இரண்டாம் பகுதி ரூ.7,145 கோடி மதிப்பீட்டில் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி முழுவதும் பயன்பெறும் வகையில் முல்லைப்பெரியாரை நீராதாரமாகக் கொண்டு ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டம் ஏறக்குறைய 60 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. விரைவில்  பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். கோயம்புத்தூர்  மாநகராட்சியில் 24 x 7 குடிநீர் திட்டம், பில்லூர்-3 குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.  திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளின் குடிநீர் திட்டங்கள் முடிவுறும் தருவாயில் உள்ளன.  தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிதாக குடிநீர்திட்டப் பணிகள் 2023-24ஆம் ஆண்டில் துவங்கப்படவுள்ளன இவ்வாறு கூறினார்

Related Stories: