உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இடு பொருட்கள்

மேலூர் : மேலூரில் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் தயாரித்து, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலூர் விநாயகபுரத்தில் தமிழ்நாடு அரசு வேளாண் துறை மூலம் மாநில ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகம் மேலூர் வேளாண் உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேளாண் பயிர்கள் உற்பத்தியில் பயிரை தாக்கக்கூடிய பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு எண்ணற்ற ரசாயன பூச்சி மருந்தகம், ரசாயன பூஞ்சாண மருந்தகம் உள்ளது. இந்த ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், மண்வளம், மனித இனம் மற்றும் கால்நடைகளுக்கு பல பின்விளைவுகள் ஏற்படுகிறது.

மேலும் பயிருக்கு நன்மை தரக்கூடிய பூச்சிகளையும் அழித்து விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் செய்வதற்கான செலவும் அதிகமாகி விடுகின்றது. இதனால், உயிரியல் முறையில் ஒட்டுண்ணிகள், எதிர் உயிரி பாக்டீரியா, பூஞ்சாணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து, நோய்களை கட்டுபடுத்த, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இவற்றை விநியோகம் செய்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காகவே இந்த உயிரியல் கட்டுபாட்டு ஆய்வகம் முயற்சித்து வருகிறது.

இங்கு சூடோமோனாஸ் (பாக்டீரியா கொல்லி), டிரைக்கோடெர்மா விரிடி (பூஞ்சாண கொல்லி), மெட்டாரைசியம் அனிசோபிளியே (பூஞ்சாணம்) ஆகிய உயிரியல் காரணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் இவை விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

உயிரியல் கட்டுபாட்டு ஆய்வக வேளாண் அலுவலர் ஜெயந்தி கூறும்போது, ஒரு உயிரியை வைத்து மற்றொரு உயிரியை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வு இங்கு நடைபெறுகிறது. இந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் தமிழகம் முழுவதும் மொத்தம் 13 உள்ள நிலையில், தென் மாவட்டங்களுக்கு மேலூரில் இருந்தே இவை அனுப்பப்படுகிறது.

மேலூரில் இந்த ஆய்வகம் 1995 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த வகை பாக்டீரியா மற்றும் பூஞ்சாணங்கள் நெல் மற்றும் வாழைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 35 டன் வரை இங்கு உற்பத்தி செய்து, அரசு வேளாண் விற்பனையகங்கள் மூலம் இவை விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

Related Stories: