நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும்-வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு

வல்லம் : தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 14,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயறு வகை பயிறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்குப் பின் உளுந்து சாகுபடி திட்டம் இவ்வாண்டில் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதன்படி நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 சத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த வட்டாரத்தில் தஞ்சாவூர் விரிவு, சூரக்கோட்டை, வல்லம் மற்றும் மானங்கோரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்கள் விவரத்தை உழவன் செயலியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நெல் தரிசில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்குப்பிறகு மார்கழி- தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ளலாம். இதற்கு உளுந்து-ஆடுதுறை 3, 5, 6, வம்பன் 6, 8 , பாசிபயிறு - ஆடுதுறை 3, கோ8 ரகங்கள் உகந்தது.

சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதால் அதிக விளைச்சல் பெற வாய்ப்புள்ளது. எனவே பயறுவகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.

சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண்ஈரம் மெழுகுப்பதத்தில் இருக்கும்போது விதைக்க வேண்டும். நெல்தரிசு பயிறுவகைப் பயிர்களை பயிறுகளின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது.

நெல் தரிசுப் பயிரில் விதைத்த 18-20ம் நாள் அதாவது சம்பா நெல் அறுவடை செய்த 10ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லிட்டர் அளவில் தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகைகள், நெல் மறுதாம்பு பயிர் மற்றும் அறுவடையின்போது விழுந்து முளைத்த நெல் நாற்றுகள் ஆகியவை நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்படுகிறது.

பயிறுவகை பயிர்களில் இலைவழி உரமிடல் ஒரு முக்கிய தொழில் நுட்பம் ஆகும். குறிப்பாக நெல் தரிசில் அடியுரம் இடமுடியாத நிலையில் இலைவழி உரமாக தெளிப்பது விளைச்சல் அதிகரிப்பதற்கு வழிகோலுகிறது. காய்கள் அதிகம் பிடித்து விளைச்சல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.

எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மகசூலும் வருவாயும், மண்வளத்தையும் கொடுக்கும் உளுந்து சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

Related Stories: