அமெரிக்காவிடம் இருந்து 30 உயர்தொழில்நுட்ப ‘ட்ரோன்’ கொள்முதல்: கடற்படை தலைவர் தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து 30 உயர்தொழில்நுட்ப ட்ரோன்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக கடற்படை தலைவர் ஆர் ஹரிகுமார் தெரிவித்தார். இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரிகுமார், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘சீன எல்லையிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் நாட்டின் கண்காணிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த மூன்று பில்லியன் டாலர் மதிப்பிலான 30 ‘எம்க்யூ-9பி’ பிரிடேட்டர் (ஆயுதமேந்திய உயர்தொழில்நுட்பம் கொண்ட) ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

முப்படைகளுக்கும் தலா 10 ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.  இந்தவகை ட்ரோன்கள் 35 மணி நேரம் வரை காற்றில் பறக்கும். 1,900 கி.மீ பரப்பளவில் மணிக்கு 482 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியது. இந்த ட்ரோன்கள் மூலமாக தான், அமெரிக்க ராணுவம் அல்கொய்தா தலைவன் அல் ஜவாஹிரியைக் கொன்றது. நாட்டின் 100வது ஆண்டு (2047) சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்திய  கடற்படை முற்றிலும் தன்னிறைவு அடையும் வகையில் திட்டங்கள்  வகுக்கப்படுகின்றன.

கடந்த 2020ம் ஆண்டில், கடற்படை அதன் உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை அதிகரிக்க அமெரிக்காவிடமிருந்து ஒரு ஜோடி சீகார்டியன் ட்ரோன்களை குத்தகைக்கு வாங்கியது. இந்தியப் பெருங்கடலை உன்னிப்பாகக் கண்காணிக்க இந்த ட்ரோன்கள் உதவின’ என்றார்.

Related Stories: