31 ஆண்டுகள் சிறை வாசம் முடிவுக்கு வந்தது!: விடுதலை காற்றை சுவாசித்தார் பேரறிவாளன்..திமுக எம்.பி. கனிமொழி, உதயநிதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வாழ்த்து..!!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழக தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்,

திமுக எம்.பி. கனிமொழி:

பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தாமதமாகியிருந்தாலும், நீதியும், அற்புதம்மாளின் போராட்டமும் வென்றிருக்கிறது. மாநில அரசின் முடிவினை ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தும் முறைக்கும் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்:

பேரறிவாளன் அவர்களின் விடுதலை மூலம் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை பெற்று மாநில உரிமையை நிலைநாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என உதயநிதி எம்எல்ஏ கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகள் எனவும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் எனவும் மற்றும் அற்புதம்மாளுக்கு என் அன்பு எனவும் உதயநிதி எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்.பி. டி.ஆர். பாலு:

பேரறிவாளன் விடுதலை மிக்க மகிழ்ச்சிகரமானது என்று  திமுக எம்.பி. டி.ஆர். பாலு வரவேற்பு தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது எனவும் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

சமக தலைவர் சரத்குமார்:

பேரறிவாளன் விடுதலைக்கு சமக தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். கருணை அடிப்படையில் தீர்வினை அளித்து நீதியினை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்றத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்:

பேரறிவாளன் விடுதலை, காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள நீதியானது இந்த நாட்டின் நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பேரறிவாளனுக்கு கிடைத்துள்ள விடுதலையை முன்மாதிரியாக கொண்டு சிறையில் வாடும் மீதமுள்ள அனைவரையும் விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் போராட்டத்தை தொடங்க வேண்டும் எனவும் கூறினார்.

வி.கே. சசிகலா:

பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். அன்று அம்மா விதைத்த விதைக்கு கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இன்று பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2014ம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூளுரைத்தார் எனவும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்:

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மரண தண்டனையிலிருந்து மீண்டார் ; ஆயுள் சிறைவாசத்திலிருந்தும் நிரந்தர விடுதலை! அற்புதம் அம்மாள், பேரறிவாளன் என்பவை பெயர்கள் அல்ல, மனித உரிமைப் போராட்டத்தின் உலகளாவிய குறியீடுகள்! இந்த விடுதலைக்கு வழிவகுத்த மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்:

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது ட்விட்டர் பதிவில், ‘ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி இது’ என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதையும் கடந்து குரலற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கில் ஒருவருக்கு முழுமையான நீதி வழங்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கிறது. பேரறிவாளனின் விடுதலைக்கு சிறையில் இருந்தபடியே அவர் நடத்தி வந்த நீண்ட நெடிய சட்டப் போராட்டம் தான் முதன்மைக் காரணம் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

முன்னாள்  பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக  சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். தனது பாதி காலத்தை  சிறையிலேயே அவர் அனுபவித்து விட்ட நிலையில் பேரறிவாளனின் விடுதலை அவரது தாயார் அற்புதம்மாளின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அற்புதம்மாளின் விடா முயற்சியால் இன்று  தனது மகனை மீட்டெடுத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: