மழை நீர் வடிகாலில் அடைப்பு வெள்ளத்தில் மிதக்கும் ரயில்வே குடியிருப்பு-பராமரிப்பு இல்லாததால் வீடுகள் சேதம்

நாகர்கோவில் :தென்னக ரயில்வேயில் அதிக வருமானமுள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கொரோனாவுக்கு பிறகு பல ரயில்களின் இயக்கம் மாற்றப்பட்டுள்ளன. சில ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், திருவனந்தபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களின் சந்திப்பு ரயில் நிலையமாகவும் உள்ளது.  நாகர்கோவில் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே ரூ.450 கோடி என முதற்கட்டமாக திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.  கூடுதல் தண்டவாளங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகளும் வேகமெடுத்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் மாஸ்டர்பிளான் திட்டத்தில் நாகர்கோவில் ரயில் நிலையமும் இணைந்துள்ளது. இந்த திட்ட மேம்பாட்டு பணிகளின் மூலம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு மேலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் பின்புறம் 4 வழிச்சாலை வருகிறது. இந்த சாலையோடு ரயில் நிலையத்தை இணைக்கும் புதிய சாலை அமைய  இருக்கிறது.

அதன் அருகில் 32 ஏக்கரில் 40 கோடியில் பஸ் போர்ட் அமையவும் திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெறலாம் என கூறப்படுகிறது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏற்கனவே பிளாட்பாரம் 1ல் இருந்து 2வது பிளாட்பாரத்துக்கு செல்ல மட்டும் எஸ்கலேட்டர் இருந்தது. தற்போது கூடுதலாக 2 மற்றும் 3 வது பிளாட்பாரங்களுக்கு எஸ்கலேட்டர், நடைமேம்பாலம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர லிப்ட் வசதியும் 3 பிளாட்பாரங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பயணிகளுக்கான கழிவறை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.   பயணிகளுக்கான தங்கும் அறையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாஸ்டர் பிளான் திட்டத்தில் இணைந்துள்ளதால், இன்னும் சில ஆண்டுகளில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சி தர இருக்கிறது.

 இப்படி பல்வேறு பணிகள் நடந்து வரும் நிலையில் ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பு கோமா நிலையில் உள்ளது. ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பு சந்திப்பு ரயில் நிலையத்தின் முன்பு வலது புறத்தில் அமைந்துள்ளது. 130 வீடுகள் கொண்ட குடியிருப்பில் அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை குடியிருந்து வந்தனர். அதிகாரிகள் இருக்கும் சில வீடுகள் தனியாக வண்ணம் பூசப்பட்டு பராமரிக்கப்பட்டு நல்ல நிலையில் காணப்படுகிறது. ஊழியர்கள் தங்கும் வீடுகள் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகிறது. ஏற்கனவே திருவனந்தபுரம் கோட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை புறக்கணித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது.

மேலும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய வருமானத்தை பெற்றுக்கொண்டு, குமரிக்கு வரும் அனைத்து ரயில்களையும் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்கின்றனர் என பல அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். குமரியை திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் இருந்து பிரித்து, மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். அல்லது நெல்லையை மையமாக கொண்டு ஒரு கோட்டத்தை உருவாக்கி குமரியை இணைக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்களும், ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரயில்வே குடியிருப்புக்குள் அகலமான சாலைகள், சிறுவர் பூங்கா, ஊழியர்கள் விளையாட விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது. இதனை தவிர நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் குடிநீர் மேல்நிலை தொட்டியும் அமைக்கப்பட்டு குடிநீரும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மழை நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மழை பெய்தால், குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்காமல், தண்ணீர் ரயில் நிலையம் வழியாக குமரி அணையில் இருந்து பறக்கை குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் சென்று சேரும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் எந்த பெரிய மழை பெய்தாலும் குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்காமல் தண்ணீர் வெளியேறிவிடும். இந்த குடியிருப்புக்குள் இடம் கிடைக்காமல் ரயில்வே ஊழியர்கள் பலர் வெளியே வீடு எடுத்து தங்கி இருந்தனர். ஆனால் தற்போது நிலமை மாறியுள்ளது. ரயில்வே குடியிருப்பில் போதிய வீடுகள் காலியாக இருந்தும் ஊழியர்கள் குடியிருக்க வரவில்லை. போதிய பராமரிப்பு இல்லாமல் வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதுபோல் குடியிருப்பில் இருந்து தேங்கிய தண்ணீர் செல்லும் மழைநீர் வடிகால் அடைப்பட்டுள்ளதால், சிறிய மழைக்கே குடியிருப்பு தண்ணீரில் மிதக்கிறது.

இது குறித்து அந்த குடியிருப்பை சேர்ந்த சிலர் கூறியதாவது: நாகர்கோவில் சந்திப்பு ரயில்நிலையம் விரிவாக்கபணி நடந்து வருகிறது. இதனால் ரயில்வே குடியிருப்புக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே பாதை அமைக்க மண்கொண்டு கொட்டப்பட்டது.  மேலும் அதிக பாரங்களுடன் லாரிகள் சென்று வருவதால் குடியிருப்பில் இருந்து வெளியேறும் மழைநீர் வடிகால் அடைபட்டுள்ளது. இதேபோல் ரயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் குடியிருப்பில் இருந்து ரயில்நிலையம் வழியாக ஊட்டுவாழ்மடம் பகுதிக்கு செல்லும் கால்வாயும் அடைப்பட்டுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் ரயில்வே குடியிருப்பில் உள்ள தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பிலேயே தேங்கி நிற்கும் நிலை கடந்த சில வருடகாலமாக இருந்து வருகிறது. மேலும் பரக்கின்கால் பகுதியில் உள்ள தண்ணீரும் ரயில்வே குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. இதனால் மழைகாலங்களில் குடியிருப்பில் அதிக தண்ணீர் தேங்கி நிற்கிறது.  

மேலும் ரயில்வே குடியிருப்பில் உள்ள பல வீடுகள் பராமரிக்காமல் சேதமடைந்து காணப்படுகிறது.

இதுபோல் குடியிருப்பு வடக்கு புறம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது. ரயில்வே குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க குடியிருப்பில் இருந்து ரயில்நிலையம் வழியாக சென்ற கால்வாயை மீண்டும் சரிசெய்து தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே குடியிருப்பில் உள்ள பழுதான வீடுகளை சரிசெய்ய வேண்டும். மழைகாலங்களில் தேங்கும் தண்ணீர் தடையின்றி வெளியே செல்ல, அடைப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயை சரிசெய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ரயில்வே ஊழியர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதுபோல இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அடிக்கடி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க நிர்வாகி பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

More