முன்னாள் முதல்வர்களான இபிஎஸ்-ஓபிஎஸ்சை மோடி காக்க வைத்தாரா? தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விளக்கம்

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 6வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழக பாஜ சார்பில் கமலாலயத்தில் அவரது நினைவை போற்றும் வகையில், புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அப்துல்கலாமின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு பண்ணியிருக்கிறார்கள். சார்ஜ் பண்ணியிருக்கிறார்கள். அதுபற்றி சில விஷயங்களை லஞ்ச ஒழிப்பு துறை சொல்லியிருக்கிறார்கள். அனைத்துக்கும் நீதிமன்றம் இருக்கிறது. நீதிமன்றம் நடுநிலையாக இருக்கும். நீதிமன்றம் நல்ல ஒரு முடிவு எடுக்கும். அதே சமயத்தில் இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர், டெல்லி சென்று பிரதமரை சந்தித்துள்ளனர்.

என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடியவர்கள், அவ்வப்போது பிரதமரை சந்திப்பது வழக்கம் தான். அது புதுசு கிடையாது. நிறைய முறை பிரதமர் இங்கு வந்திருந்தபோது கூட சந்தித்தார்கள். தேர்தல் முடிந்து முதன் முறையாக, பிரதமர் இங்கு வர முடியாததால் டெல்லி போய் பார்த்துள்ளனர். இதில் அரசியலாக பார்த்தார்கள் என்றெல்லாம் கிடையாது. முன்னாள் முதல்வர்களான இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் நீண்ட நேரம் காத்திருந்து பிரதமரை சந்தித்ததாக கேட்கிறீர்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் எல்லாருக்கும் தெரியும்.  பிற்பகல் 11.15 மணி முதல் 11.25 மணி வரை சந்தித்தனர். நாடாளுமன்றத்தில் அந்த பிசியான நேரத்தில் கூட நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் அவர்களை பார்த்திருக்கிறார். சரியான நேரம் கொடுத்து, சரியான நேரத்தில் அவர்களும் வந்து பார்த்தனர். அவர்களை காக்க வைக்க வேண்டிய எந்த அவசியமும் பிரதமருக்கு கிடையாது என்றார்.

Related Stories: