சென்று வா வெற்றி நமதே என கேப்டன் வாழ்த்து: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருப்பமனு.!!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், ஒருபுறம் கூட்டணி; மறுபுறம் தொகுதி பங்கீடு என அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே,  தேசிய முற்போக்கு திராவிட கழக விருப்பமனு விநியோகம் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முதல் தொடங்கியது.

அன்றைய தினமே சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன்  போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்தனர். விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்த தேமுதிக தொண்டர்கள், விருகம்பாக்கத்தில் பிரேமலதாவும், அம்பத்தூரில் விஜயபிரபாகரனும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

இதனையடுத்து, இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.எந்த தொகுதியில் போட்டி என குறிப்பிடாமல் விருப்ப மனுவை அளித்தார். இதனை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தாய் பிரேமலதாவை போன்று விஜயபிரபாகரனும் எந்த தொகுதியில் போட்டி என குறிப்பிடாமல் விருப்ப மனு அளித்துள்ளார்.

விருப்ப மனு அளித்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விஜயபிரபாகரன், தொண்டர்களின் விருப்பம் அடிப்படையில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். முதல்முறையாக தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சென்று வா வெற்றி நமதே என்று தனது தந்தை கேப்டன் விஜயகாந்த் தெரிவித்ததாகவும் கூறினார். நான் எந்த தொகுதியில் நின்றாலும் தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  தேமுதிக தமிழகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா எந்த தொகுதியில் நிற்க சென்னாலும் அங்கு நிற்பேன். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். நான், விருப்ப மனு மட்டும்தான் தாக்கல் செய்ய வந்தேன் என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>