ஐதராபாத்: பெண்களின் நடத்தை குறித்து நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐதராபாத்தில் ‘மன சங்கர வரப்பிரசாத் காரு’ தெலுங்கு படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிரஞ்சீவி, ‘சினிமா துறை ஒரு கண்ணாடி போன்றது. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் அதுவும் நம்மை பிரதிபலிக்கும். இத்துறையில் பெண்கள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டு, கண்டிப்புடனும், நேர்மையாகவும் இருந்தால் யாரும் அவர்களை தவறாக பயன்படுத்த மாட்டார்கள்’ என்று கூறினார். மேலும் இதற்கு தனது மகள் மற்றும் தயாரிப்பாளர் அஸ்வினி தத் ஆகியோரின் மகள்களை உதாரணமாக சுட்டிக்காட்டினார். இவரது இந்த கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘சினிமா பின்புலம் உள்ள வாரிசுகளுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதை அவர் மறைக்கிறார்’ என்றும், ‘பாதிக்கப்பட்டவர்கள் மீது பழிபோடும் செயல் இது’ என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
